தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் - ஜீவன்

தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் - ஜீவன்

ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட மஸ்கெலியா - ஸ்டோக்கம் மற்றும் கவரவில ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கேட்டறிந்ததுடன், அவை தொடர்பில் தொழில் ஆணையாளருடனும் பேச்சு நடத்தினார்.

குறித்த தோட்டங்களுக்கு நேற்று (06) அவர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், அவ்வாறு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Photo_1_2.jpg

பெருந்தோட்டப்பகுதிகளுக்கு களப்பயணம் மேற்கொண்டு தொழிலாளர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் முன்னெடுத்துவருவதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்ஓர் அங்கமாக ஸ்டோக்கம் மற்றும் கவரவில ஆகிய தோட்டங்களுக்கு சென்றிருந்த ஜீவன் தொண்டமானிடம், தாம் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களை தொழிலாளர்கள் எடுத்துரைத்தனர்.

" தரிசு நிலங்களை விவசாயம் மேற்கொள்வதற்கு பகிர்ந்தளிக்குமாறு கோரப்பட்டபோதிலும் அதற்கான நடவடிக்கை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகின்றது. அதேபோல அரைநாள் சம்பள பிரச்சினைக்கு இன்னும் உரிய தீர்வு கிட்டவில்லை. தொழில்சார் சலுகைகளும் மறுக்கப்படுகின்றன." எனவும் தொழிலாளர்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

Photo_4_5.jpg

இதனையடுத்து இவ்விவகாரம் சம்பந்தமாக தொழில் ஆணையாளருடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தினார். தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தலையீடுகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், தோட்ட நிர்வாகம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தீர்வை வழங்காவிட்டால்  தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி கனகராஜ், மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் அமைச்சருடன் சென்றிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image