மாணவர்களை பாடசாலைக்கு இணைக்கும் முறைமை தொடர்பாக விசாரணை

மாணவர்களை பாடசாலைக்கு இணைக்கும் முறைமை தொடர்பாக விசாரணை

பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் ஆணைக்குழுவிற்கு 300 முறைப்பாடுகள் வரை கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதிலும் 06 ஆம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர்களை அனுமதிப்பதிலும் இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

பல்வேறு சுற்றறிக்கைகள் அமுல்படுத்தப்பட்ட போதிலும் ஆறாம் தரம் மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்காக மாணவர்களை அனுமதிப்பது குறித்து கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்திலான திட்ட வரைபுகளை இதுவரை தயாரிக்கவில்லை என்பது தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

சில முக்கிய பாடசாலைகளில் உதவித்தொகை பெற்றும் பணம் பெற்றுக்கொண்டும் ஆறாம் வகுப்புக்கு மேலுள்ள வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதால் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற திறமையான மாணவர்களுக்கான வாய்ப்புகள் அற்றுப்போனதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பல தடவைகள் அழைக்கப்பட்ட போதிலும் அவர் இதுவரையில் ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் தொடர்ந்தும் ஆணைக்குழுவை புறக்கணிக்கும் பட்சத்தில் அது தொடர்பில் உயர் நீதிமன்றில் மனு  தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image