அரச சேவை ஆட்சேர்ப்பு - நியமனம் குறித்து அரசாங்கத்தின் அறிவித்தல்
நாளை 30 ஆயிரத்துக்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அதிகளவானனோர் ஒரே தடவையில் ஓய்வுபெறவுள்ள நிலையில், அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இதில் 2021 ஆம் ஆண்டு அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுபவர்களையும் உள்ளடக்கி வரலாற்றில் முதல் தடவையாக பெருமளவானோர் நாளை ஓய்வு பெறவுள்ளனர்.
பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் மூலம் அரச சேவை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரச சேவையில் மீளவும் வெற்றிடம் நிலவுமாயின், அந்த விடயத்தில் என்ன செய்யலாம் என இதனூடாக பார்க்கப்படும்.
அத்துடன், 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஓய்வுபெறும் அரச உத்தியோகத்தர்களுடன் ஒப்பிடுகையில், தற்போதுள்ள அரச ஊழியர்கள் மூலம் அந்த வெற்றிடங்களை நிரப்ப முடியுமா என்றும் அவதானம் செலுத்தப்படும்.
அதேநேரம், அலுவலக உதவியாளர்களாக இருந்தவர்களை, முகாமைத்துவ சேவைக்கு உள்ளீர்ப்பதற்காக, 2019 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பரீட்சைகளில் தோற்றியவர்களுக்கும், நியமனங்கள் வழங்கப்படும்.
ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பில், 32 ஆயிரம் பேரை, பிரிவுகளின் அடிப்படையில் இந்த வெற்றிடங்களுக்கு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி, 9 மாகாண சபைகளுக்கு 12 ஆயிரத்து 669 பேர் ஆட்சேர்க்கப்படவுள்ளனர். எனவே, அரச ஊழியர்கள் இந்த ஆண்டில் ஓய்வுபெறவுள்ளமையால், அரச சேவை ஒருபோதும் வீழ்ச்சியடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.