பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் மீண்டும் மக்களுக்கு - ஜனாதிபதி
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து காணிகளுக்குமான அனுமதிப்பத்திரங்களை ரத்துச் செய்து மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்டச் செயலக அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் நடைபெற்ற நுவரெலிய மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த பணிகளை எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50 சதவீதமானவை அரச அதிகாரிகளால் தீர்த்து வைக்கக்கூடியவை. அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மட்டுமன்றி அமைச்சர் கூட கொழும்பிலிருந்து வரவேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் அரச நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு அதிக பட்ச சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.
நுவரெலிய மாவட்டத்தின் காணிப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து தயாரிக்கும் அறிக்கையை பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு கிடைக்கச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அந்த அறிக்கையை சமர்பிக்கத் தவறினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் குறிப்பிட்டார்.