தெற்காசியாவில் பெண்களின் கல்வியறிவு அதிகரித்திருந்தபோதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தே காணப்படுகிறது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தெரிவித்தார்.
பாலின அடிப்படையிலான வன்முறைகள் இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் உலக பிரசார செயற்பாடு நிமித்தம் கருத்து வௌியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர். பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் தோட்டத் தொழிலாளர் பெண்கள் எதிர்நோக்கும் விதம் ஏனையோர் எதிர்நோக்குவதை விடவும் வித்தியாசமானவை. பாதிக்கப்பட்ட பெண்கள் அதனை வௌியில் சொல்வதும் இல்லை. பாதிப்புக்குட்படுத்தியவர்கள் தண்டனைப் பெறுவதும் இல்லை.
எனவே பாலின அடிப்படையிலான வன்முறைகள் இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.