பாடசாலை கல்வியை பூர்த்தி செய்துள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் 4 வருட தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வௌிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் ஜப்பான கோஷோ நகர ஆளுநருக்கும் இடையிலான ஆரம்பகட்ட கலந்துரையாடலில் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கமைவாக க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய பின்னர் ஜப்பானில் விவசாய துறையில் 4 வருட பட்டப்படிப்புடன் கூடிய பயிற்சி பெற்றுக்கொள்ள முடியும். இக்காலப்பகுதியில் அந்நாட்டில் வீடுகளில் தங்கி இருநாடுகளுக்கிடையான கலாசார பரிமாற்றங்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக நவீன விவசாய தொழில்நுட்பங்கள் தொடர்பில் மேலதிக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் காலி நகரத்தை சகோதர நகரமாக அபிவிருத்தி செய்வதற்கும் இதன்போது இணக்கபாடு எட்டப்பட்டுள்ளது. மாணவர் பரிமாற்ற திட்டம் ஆரம்பிக்க முதல் கோஜோ நகர பாடசாலைகள் காலி மாவட்ட பாடசாலைகளுடன் இணையவழியூடாக தொடர்பு கொண்டு பரிமாற்ற நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளன.
அத்துடன் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் காணப்படும் விசேட வாய்ப்புகள் தொடர்பிலும் ஜப்பான் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, விவசாய செயலாக்க தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து ஜப்பான் கவாய் பல்கலைக்கழகம் அமைச்சரிடம் சிறப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஜப்பானிய மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக மனிதவள அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் ஜப்பானிய பிரதிநிதிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.