அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து பாராளுமன்றில் வௌியிடப்பட்ட கருத்து
அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளம் வழங்கல் குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வௌியிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிதி நெருக்கடிக்கு மத்தியில், அரச பணியாளர்களுக்கான சம்பளத்தைக்கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெல குருநாகல் தொடருந்து பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வருவாய் தேக்கமடைந்துள்ளதால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய பாரியளவிலான கொடுப்பனவுகளை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு உதாரணங்களாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு செலுத்தப்படவேண்டிய நூறு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பற்றுச்சீட்டுகள் தம்மிடம் உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நிதி ஒழுக்கத்தை பேண வேண்டும் என்ற நிபந்தனை இருந்த போதிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பணத்தை அச்சிட முடியாது. கடன் வாங்கலை மறுசீரமைக்கும்போது, ஒழுக்க விதிகளை மீறினால், அதனைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.