போக்குவரத்து தொடர்பில் அரச - தனியார் ஊழியர்களுக்கு விசேட அறிவித்தல்
போக்குவரத்து சேவை தொடர்பில் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ரயில் உதிரிப்பாகங்கள் இன்மையினால், நாளாந்தம் 14 ரயில் சேவைகளை ரத்து செய்வதற்கு கட்டுபாட்டாளர் நடவடிக்கை எடுத்தமையினால் பயணிகள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில்களுக்கு தேவையான உராய்வு எண்ணெய் இல்லை என்பதுடன், இயந்திரம் மற்றும் பெட்டிகளுக்கு தேவையான உதிரிப்பாகங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, உடனடியாக தலையிட்டு குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே கட்டுப்பாட்டாளரிடம் அந்த சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தில் 19 ஆயிரத்து 382 சேவையாளர்கள் இருக்க வேண்டும். இருப்பினும், தற்போது சுமார் 10 ஆயிரத்து 500 சேவையாளர்களே பணியாற்றுவதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த நாட்களில் கரையோர மார்க்கத்தில் சில ரயில்கள் தடம்புரண்ட நிலைமைகளுக்கு மத்தியில், ரயில்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையுடன், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில பயணிக்க முடியாது. 30, 40, 60 என்ற கிலோமீற்றர் அளவான வேகத்திலேயே பயணிக்க முடியும். இதனால், அலுவலக தொடருந்துகள் தாமதமடையும். அத்துடன், மாலை நேரத்தில் அலுவலகப் பணிகள் நிறைவடைந்து வீடு செல்லும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
வழமையாக மணிக்கு 40, 50, 60 என்ற கிலோமீற்றர் வேகத்திலேயே நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது மணிக்கு சுமார் 20 கிலோமீற்றர் என்ற வேகக் கட்டுப்பாடு தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணமாக, கரையோர மார்க்கத்தில் ரயில்கள் தொடர்ச்சியாக தாமதமாகும் என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.