எஞ்சியுள்ள உதவி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்தை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
கல்வி இராஜாங்க அமைச்சராக நேற்று பத்தரமுல்லை செத்சிறிபாயவில் உள்ள அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மலையகத்தில் உதவி ஆசிரியர்களை பொறுத்தவரை இது இன்று ஒரு புரையோடிப்போயுள்ள பிரச்சினையாக பார்க்கின்றேன். 2015 ஆம் ஆண்டு இந்த நியமனம் வழங்கல் ஆரம்பமாகியது. பல்வேறு நிபந்தனைகள் இந்த தற்காலிக நியமனத்தில் கூறப்பட்டிருந்தது. அந்த நிபந்தனைகளை பூரத்திசெய்தல் மாத்திரமே நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற சரத்து அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவ்வாறு நியமனத்தை பெற்றவர்கள் அங்கு குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து இருக்கின்றார்கள். இன்று நூற்றுக்கணக்கானவர்களுக்கு நியமனம வழங்க வேண்டி இருக்கின்றது
அதில் பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை என எந்த மாவட்டாகவும் இருக்கலாம்.
இவ்வாறு அனைத்து பிரதேசங்களிலும் இந்த பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. ஆகவே இப்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பின் ஊடாக என்னால் எந்த அளவிற்கு அதனை தீர்க்க முடியுமோ அதனை தீர்ப்பதற்கு நான் எனது முழுமையான பங்களிப்பை ஆற்றுவேன் என கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.