உரிய வேதனம் வழங்க கோரி தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஆர்.பி.கே. பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் (12) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பின்படி தமக்கான வேதனம் முழுமையாக வழங்கப்படவில்லை என்று தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
தின கூலியாக ரூபா 1000 வழங்காலமல் தாம் பறிக்கும் பச்சை கொழுந்து கிலோ ஒன்றுக்கு ரூபா 50; வீதம் வழங்க குறித்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளதை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவர்கள் தெரிவித்தனர். என்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையில் சகல உணவு பொருட்களும் ஏனைய அத்தியவசிய பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்ததுள்ள நிலையில் தற்போதய வேதனத்தில் தமது குடும்பங்கள் பெரும் பொருளாதார சுமையை சந்தித்துள்ளதாக இவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான கால கட்டத்தில் அரசாங்கம் உடனே தமது வேதனம் தொடர்பில் நடவடிக்கை எடுத்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாதிக்க படுவதை தடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை முன் வைத்தனர்.
குறித்த தோட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் சுமார் ஒரு மணிநேரம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன் அதன் பின்னர் தமது பணிக்கு திரும்பினர்.