குடிநீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது - முழு விபரம்

குடிநீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது - முழு விபரம்

நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (26) வௌியிடப்பட்டது.

இதற்கிணங்க,  எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம்  திகதி முதல் அமுலாகும் வகையில், மாதாந்த நீர் பாவனை கட்டணம் 70 வீதமாகவும் மாதாந்த சேவை கட்டணம் 50 ரூபா முதல் 300 ரூபா வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இதற்கு முன்னர் 15 அலகுகள் பயன்படுத்தியிருப்பின், 310 ரூபா அறிவிடப்பட்ட நிலையில், திருத்தங்களின் பிரகாரம் புதிய கட்டணமாக 705 ரூபா அறவிடப்படவுள்ளது.

கடந்த காலங்களில் நாளொன்றில் 500 லிட்டர் நீரை பயன்படுத்தும் வீட்டு பாவனையாளர்களுக்கு நாளொன்றுக்கு 10 ரூபா அறவிடப்பட்ட போதிலும், புதிய திருத்தத்தில் நாளொன்றுக்கு 23 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

மத வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகளுக்கான நீர் கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

சமுர்த்தி பயனாளர்கள், தோட்ட குடியிருப்பாளர்களின் நீர் பாவனை கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்ற போதிலும், சேவைக் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 100 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

'சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் தோட்டக் குடியிருப்பாளர்கள் அல்லாத' மற்றும் 'சமுர்த்தி பெறுநர்கள் அல்லாத தோட்டக் குடியிருப்பாளர்கள்' என வீட்டுப்பாவனைக்கான பாவனையாளர் தொகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, சமுர்த்தி பெறுநர்களின் பாவனை 75  அலகுகளுக்கு மேல் காணப்படுமாயின், ஒரு அலகுக்கு 140 ரூபாவும், சேவைக் கட்டணமாக 1600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் தோட்டக்குடியிருப்பாளர்கள் அல்லாத பாவனையாளர்கள்,  75  அலகுகளுக்கு மேல் பயன்படுத்தியிருப்பின், பாவனைக் கட்டணமாக ஒரு அலகுக்கு 245 ரூபாவும் மாதாந்த சேவைக் கட்டணமாக 3500 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பெறுநர்கள் அல்லாத தோட்டக் குடியிருப்பாளர்களுக்கு 75 அலகுகளுக்கு மேல், அலகொன்றுக்கு 140 ரூபாவும் சேவைக் கட்டணமாக 1600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

பொதுநீர் குழாய்கள் மற்றும் பூங்கா நீர் குழாய்களில் பாவனை அலகு 201 அலகுகளுக்கு மேல் காணப்படுமாயின், அலகொன்றுக்கு 15 ரூபாவும் மாதாந்த சேவைக் கட்டணமாக 2500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

அரச பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்களில்  75-க்கும் மேற்பட்ட பாவனை அலகுக்கு, அலகொன்றுக்கு 16 ரூபாவும் மாதாந்த சேவைக் கட்டணமாக 1600 ரூபாவும் அறவிடப்படும் என அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலகுகளுக்கு அலகொன்றுக்கு 69 ரூபாவும் சேவைக் கட்டணமாக ஒரு இலட்சம் ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

வணிக நோக்குடன் இயங்கும் நிறுவனங்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் 20,000 அலகுகளுக்கு மேல் பாவனை இருப்பின், பாவனைக் கட்டணமாக 116 ரூபா அறவிடப்படுவதுடன், மாதாந்த சேவைக் கட்டணமாக  1,15,000 ரூபாவும்   அறவிடப்படவுள்ளது.

இதனை தவிர, புதிய சேவை இணைப்பொன்றை வழங்குவதற்கான செலவானது, பாவனையாளர்களிடமிருந்து அறவிடப்படும் என வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாதத்தில் நீரை பயன்படுத்தாத பாவனையாளர்களுக்கு குறைந்த மாதாந்த சேவைக் கட்டணம் மற்றும் பெறுமதி சேர் வரி ஆகியன அறிவிடப்படும்.

அத்துடன், பாவனையாளர்கள் தமது பட்டியலுக்கான நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கழிவு நீர் அமைப்பிற்கான கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image