பெண்கள் இரவுப் பணிகளில் அமர்த்துவது குறித்த சட்டவிதிகளை திருத்த அனுமதி
பெண்களை இரவுப் பணியில் அமர்த்துவது தொடர்பாக தற்போதுள்ள கட்டுப்பாடுகள் கொண்ட சட்ட விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விற்பனைநிலையங்கள மற்றும் அலுவலக பணியாளர்கள் (சேவை மற்றும் ஊதியங்களை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் கீழ், மாலை 6.00 மணிக்குப் பின்னர் குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளில் மட்டுமே பெண்களை ஈடுபடுத்த முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல தெரிவித்தார்.
அறிவு மற்றும் வணிக செயல்முறை வௌியில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள், பிற நாடுகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கான கணக்குகள், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அலுவலகங்கள் மற்றும் பல தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான வணிக நிறுவனங்கள் தற்போது இலங்கையில் செயற்படுகின்றன. மேலும் அவற்றின் ஊழியர்கள் மற்ற நாடுகளின் நேர அட்டவணைக்கு ஏற்ப பணியாற்ற வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதற்கமைய, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு குறித்த சட்டவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (9) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.