புதிய ஜனாதிபதி தெரிவு: தொழிற்சங்கங்கள் - வெகுஜன அமைப்புகளின் நிலைப்பாடு இதோ...

புதிய ஜனாதிபதி தெரிவு: தொழிற்சங்கங்கள் - வெகுஜன அமைப்புகளின் நிலைப்பாடு இதோ...

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய பாராளுமன்றத்தில் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்கள் இருக்கின்றனர். அப்போது தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராடுகின்றர்.  அந்தப் போராட்டத்தின் விளைவாக கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. 69 லட்சம் மக்கள் வாக்களித்திருந்தனர் கூறப்பட்டாலும் அவர்கள் அனைவரும் அவருக்கு எதிராக போராடியுள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு வெளியே இருக்கின்ற மக்கள் கருத்து பாராளுமன்றத்திற்கு உள்ளே இல்லை. மொட்டு கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளனர். ரணில் விக்ரமசிங்கவை முன்மொழிவு வழிமொழிய எவருமே இல்லை. இவ்வாறான நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் அவர் முன்மொழியப்பட்டு வழிபட்டார். வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு பாராளுமன்றத்தின் மூலம் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

ஏனென்றால் அங்கே மொட்டு கட்சி்க்கு இருக்கின்ற பெரும்பான்மை அதிகமாகும். இதனை முழுமையாக சூழ்ச்சி நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம். கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள், அரச சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டவை, அதிகாரம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை, நாட்டின் பணம், சொத்து கொள்ளையிடப்படடமை முதலானவை தொடர்பில் இந்த சமூகத்தில் பாரிய எதிர்ப்பு இருக்கின்றது. கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து வெளியேறி சென்றதன் பின்னர் அவற்றை மீள பெற்றுக்கொள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த அனைத்தையும் தவிர்ப்பதற்காகத்தான் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி இருக்கின்றார்கள். தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு என்ற அடிப்படையில் நாங்கள் மக்களின் கருத்தோடு இருக்கின்றோம், இவருடைய நியமனத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். இது மக்களின் கருத்து அல்ல. பாராளுமன்றத்தில் இருக்கின்ற மொட்டு கட்சி தரப்பினரின் செயற்பாடாகும். பசில் ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டின் பிரதிபலன் ஆகும். பசில் ராஜபக்ச தான் இந்த பணிகளை முழுமையாக வழிநடத்திக் கொண்டிருந்தார். பின்னணியில் அவர் தான் இருக்கின்றார்.

எனவே பாராளுமன்றத்துக்கு வெளியே மக்களுடன் இணைந்து நாங்கள் இதற்கு எதிரான வேலைத்திட்டங்களை  முன்னெடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அந்த நடவடிக்கைகளை நாங்கள் கட்டாயமாக எடுப்போம். ரணில் விக்ரமசிங்க மிகத்தெளிவாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் சந்தர்ப்பத்தில் தற்போது கோல்டு காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச் சிலை அமைந்துள்ள பகுதியில் 50 மீற்றர் எல்லைக்குள் எவரும் பிரவேசிக்க நீதிமன்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல அடக்குமுறையோடு ஆரம்பித்திருக்கிறார்கள்.

அவசரகால சட்டத்தை கொண்டு வந்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை ஆராய்கிறார். கைவிரல் அடையாளங்களை எடுக்கின்றனர். பிரதமர் அலுவலகத்திற்கு சென்றவர்களின் கைவிரல் அடையாளங்களை எடுக்கின்றனர். இழப்புகளை ஆராய்கின்றனர். இதன் மூலமாக அடக்குமுறைக்கு தயாராகின்றனர்.

மக்களின் ஆணையோடு வராத ஆட்சியாளர் தங்களுடைய நிலை தன்மைக்காக எடுக்கும் நடவடிக்கைதான் அடக்குமுறை ஆகும். அடக்குமுறையை முன்னெடுக்க முயற்சித்தால் அதற்கு எதிராக மக்கள் கட்டாயமாக செயற்படுவார்கள். கோட்டாபய ராஜபக்ஷவும் இதுபோன்ற அடக்குமுறை ஆரம்பித்தார். எனினும் மக்கள் வெளியே வந்து போராட்டத்தை ஆரம்பித்து, ஜனாதிபதி மாளிகைக்கு வந்தவுடன் அவர் அதை விட்டு விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே நாட்டு மக்களின்  போராட்டம் தொடர்பான அனுபவம் அதற்காக முன் நிற்றல் என்ற அனைத்தும் இதுவரையில்  மறந்து போகவில்லை. இன்னும் செயற்பாட்டு ரீதியாக மக்கள் இந்த போராட்டத்தில் இருக்கின்றனர். காலிமுகத்திடல் போராட்டக்காரர்களும் இந்த போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல தயாராக இருக்கின்றனர். எனவே மக்களுடைய கருத்துக்கமைய தெரிவுசெய்யப்படாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த கதிரை உரித்தானதல்ல. மக்களுக்கு மொட்டு கட்சியை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. எனவே நீங்கள் வெளியேற வேண்டும். நீங்கள் வெளியேறும் வரை இந்த போராட்டம் தொடரும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image