8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய அடுத்துவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்குப் பதில் ஜனாதிபதியும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளால் இன்று (20) தெரிவுசெய்யப்பட்டார்.
இதில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸசாநாயக ஆகியோரின் பெயர் அடுத்துவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கு நேற்று (19) பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.
இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றதுடன், இதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகளும், டளஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 03 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.
அடுத்துவரும் ஜனாதிபதிப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட போட்டியிடும் வோட்பாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கையில் அரைவாசிக்கு மேலான எண்ணிக்கையைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்த எண்ணிக்கையை ரணில் விக்ரமசிங்க பெற்றிருந்தார். இன்றைய வாக்கெடுப்பில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 219ஆக அமைந்ததுடன், இதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
இதில் 223 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததுடன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். நான்கு வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய ரணில் விக்ரமசிங்க எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் எழுச்சிப் போராட்டத்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தின் எஞ்சிய காலப் பகுதியில் சேவையாற்றுவதற்கே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தகுதி பெற்றுள்ளார்.