கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க நகரங்களிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சூம் கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரச்சினை இல்லாத பகுதிகளில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கி ஒன்லைன் ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.
இதற்கமைய, காலை 8 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் எனவும், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் வாரங்களுக்கான கல்வி நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டார்.
நியூஸ்பெஸ்ட்