அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க என்ன செய்ய வேண்டும்? பிரதமர் விளக்கம்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க என்ன செய்ய வேண்டும்? பிரதமர் விளக்கம்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமாயின், முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.

நாணயத்தை அச்சிடாவிட்டால், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவைக்கு நேற்று (13) வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாணயத்தை அச்சிடுவது தமது கொள்கை அல்ல என்றபோதிலும் நாணயத்தை அச்சிட வேண்டி உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அந்த நேர்காணலில் பிரதமர் தெரிவித்துள்ள முக்கியமான சில விடயங்கள் கீழே...

தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம். ஆங்கிலேயர்களின் காலத்திலோ, ஒல்லாந்தர் காலத்திலோ இவ்வாறான பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை என்று நான் நினைக்கின்றேன். இந்த ஆண்டு தான் எமக்கு மிகவும் கஷ்டமான ஆண்டாகும். வெளிநாட்டு ஒதுக்கம் இல்லை. அரசாங்கத்துக்கு வருமானம் இல்லை. வெளிநாட்டு ஒதுக்கத்தை சேர்த்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்காவிட்டால் வருமானம் குறைந்து போகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்த வேண்டும். நாம் உண்மையாகவே  செயற்படுகின்றோம் என்று தெரிந்தால் ஏனைய நாடுகளும் எமக்கு உதவி செய்யும். அவற்றுடன் கலந்துரையாட வேண்டும். முதலில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட வேண்டும். நாம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. 2020, 2021ல் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்ளுமாறு உலகம் கூறியபோது நாம் அதை செய்யவில்லை.

இந்த நிலையில் எமக்கு இருக்கின்ற கையிருப்பை பயன்படுத்தி எரிபொருளுக்கான கொடுப்பனவை செலுத்தினோம். அப்போது எங்களுக்கு கையிருப்பு இல்லாமல் போகின்றது. கையிருப்பு இல்லாமல் போனதால்தான் நாடு வீழ்ந்துள்ளது. அதுமட்டுமல்ல இப்போது இந்த நாட்டிற்கு ரூபாவின் வருமானம் இல்லை. 3 ட்ரில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது தெரியுமா? அந்த மூன்று ட்ரில்லியன் ரூபா முடிவடைந்துள்ளது. இப்போது அரசாங்கத்திற்கு 100 பில்லியன் மட்டுமே இருக்கின்றது. எனவே மீண்டும் நாணயத்தை அச்சிட வேண்டும் என நாடாளுமன்றத்திடம் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அரச ஊழியர்களுக்கு (சம்பளம்) செலுத்த முடியாது.

பணத்தை அச்சி்டுவது என்னுடைய கொள்கை அவ்வாறு இல்லை. ஆனால் தற்போது அதனை செய்ய வேண்டி ஏற்படுகிறது. இல்லாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத நிலை ஏற்படும் - என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பயிலுநர் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நற்செய்தி!

சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்கும் இந்தியா

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image