நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளைமறுநாள் (12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, பொது போக்குவரத்து வீதிகள், ரயில்பாதைகள், பொதுப்பூங்காக்கள், பொது மைதானங்கள் மற்றும் ஏனைய பொதுவிடங்கள், நகரங்கள் மற்றும் கடற்கரைகளில் உரிய தரப்பினரின் எழுத்துமூல அனுமதியின்றி செல்ல முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள போராட்டக்களம் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசுக்கு எதிரான அகிம்சை வழி போராட்டத்தின் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்த நாட்டில் ஏற்பட்ட கலவர நிலையைக் கருத்திற்கொண்டு நேற்று (09) மாலை 7.00 மணி தொடக்கம் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 16ம் பிரிவுக்கமைய நேற்று பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் இன்று நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து இவ்வூரடங்கு உத்தரவு நாளை (11) காலை 7 மணியுடன் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் இன்று மீண்டும் நாளை மறுதினம் வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொதுச் சொத்துக்களை சூறையாடுபவர்களை உடனடியாக சுட முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை பொருட்படுத்தாத இளைஞர்களை உள்ளடக்கிய குழுக்கள் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல், கொலை, கொள்ளை மற்றும் தீவைப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.