ஆசிரியர்கள் - அதிபர்கள் சார்பான கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சிடமிருந்து சாதகமான பதில் இல்லை!
ஆசிரியர்கள், அதிபர்கள் சார்பில் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று (22) அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் வௌியிட்டுள்ள காணொளி பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 18 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள் விலை அதிகரித்ததுடன், போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டதுடன் மேலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதுகுறித்து நாங்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அடிப்படையில் எழுத்து மூலம் அறியப்படுத்தினோம். அதாவது இந்த நிலைமையை கவனத்தில் எடுத்து இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம்.
குறிப்பாக ஆசிரியர்களை அருகிலுள்ள பாடசாலைக்கு இணைக்குமாறு கோரினோம். பெரும்பாலான ஆசிரியர்கள் எமக்கு இதுகுறித்து எண்ணிக்கையுடன் தகவல்களை வழங்கியிருந்தனர். தாங்கள் பாடசாலைகளுக்கு வரும் போது ஏற்படுகின்ற பிரச்சினை தொடர்பில் தெரிவித்திருந்தனர். அவர்கள் எரிபொருளுக்காக வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கின்றது. அதே நேரத்தில் அவ்வாறு வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருளின் மூலம் அவர்களுக்கு ஒரு நாளைக்கு பாடசாலைக்கு சென்று வர முடியாத நிலை இருக்கின்றது.
இவ்வாறான நிலைமைக்கு மத்தியில், இந்த நிலைமைக்கு மாற்றுவழி அவசியமென்று கல்வி அமைச்சின் செயலாளரிடம் நாங்கள் எழுத்துமூலம் கோரியிருந்தோம். எனினும் நேற்றைய தினம் (நேற்றுமுனதினம் 21) வரையில் அதற்கு சாதகமான பதில் எமக்கு கிடைக்கவில்ல. தொலைபேசி மூலம் வினவியபோது எமது கோரிக்கையை நிராகரிக்கும் தன்மையே அவரிடம் காணப்பட்டது.
எனவே, தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி நிலை எமக்கு ஏற்பட்டது. இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை நாங்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்புக்கு செல்ல இருக்கின்றோம். எனவே தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலைமை நிறைவடையும் வரையில் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாங்கள் 25 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
எங்களுக்கு தெரியும் தற்போது தங்களுடைய உரிமைக்காக போராடுகின்ற மக்கள் மீது துப்பாக்கியால் பதில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. நாங்கள் ஏற்கனவே கூறியதைப் போல ரம்புக்கனையில் ஒரு இளைஞரின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற தாக்குதல்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அத்துடன் இப்படியான தாக்குதல்கள் முன்னோக்கி செல்வதற்கும் இடமளிக்கக்கூடாது. எனவே இந்த சம்பவமானது இறுதி சம்பவமாக இருக்க வேண்டும் என்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் 25ஆம் திகதி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்து இருக்கின்றோம். 25ஆம் திகதி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றியடையச் செய்ய நாம் அனைவரும் நடவடிக்கை எடுப்போம் என கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.
மேலும் செய்திகள்
தொழில் திணைக்களம் மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக இ.தொ.கா எச்சரிக்கை