தொழில் திணைக்களம் மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக இ.தொ.கா எச்சரிக்கை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்கும் முகமாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை முறையாக அமுல்படுத்தாத தொழில் திணைக்களம் மீது வழக்கு பதிவு செய்து சட்டநடவடிக்கை எடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழில் ஆணையாளர் நாயகத்துக்கு கடந்த 19 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளக் கோரிக்கையை, தொழில் அமைச்சு ஏற்று அரச வர்த்தமானியாக வெளியிடப்பட்டது.
இவ்வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட 1000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக தோட்ட நிர்வாகங்கள் பின்ப்பற்றவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக 500யிற்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களின் சம்பளப் பற்றுச்சீட்டு தொழில் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.