தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடிகளை கருத்திற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அகில இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொது நிருவாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபைகள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மக்கள் சுமக்க முடியாத சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக துறைசார் கடமைகளை முன்னெடுக்கும் அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் தூர பிரதேசங்களில் பணியாற்றும் அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, எதிபொருள் விலையேற்றம் மற்றும் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக நாளாந்த கடமையாற்றும் துறைசார் அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக கீழ்வரும் தீர்வுகளை முன்வைக்கப்படுகின்றன.
1. வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பினை வழங்குதல்.
2. அரச ஊழியர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான விசேட முறைியனை வகுத்தல்
3. அலுவலக நேரத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல்.
4. அரச அதிகாரிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதல்.
5. வாரத்திற்கு 5 நாட்கள் கடமை செய்வதற்கு பதிலாக குறைந்த நாட்களுக்குள் கடமைகளை பூர்த்தி செய்ய அனுமதி வழங்கல்.
6. தேவையற்ற காரணங்களுக்காக அலுவலகத்திற்கு அழைப்பதை தற்காலிகமாக நிறுத்துக.
7. நீண்ட தூரங்களில் இருந்து பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு தற்காலிகமாக அருகில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றுவதற்கான திட்டமொன்றை வகுத்தல்.
8. தற்போது துறைசார்ந்த அத்தியவசியமற்ற கடமைகளில் ஈடுபடுத்துவதை தற்காலிகமாக நிறுத்தல்.
மேற்கூறப்பட்டுள்ள முன்மொழிவுகளை கவனத்திற்கொண்டு உரிய தீர்வினை விரைவில் பெற்றுத்தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்வதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளதுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் எதிர்வரும் 25.04.2022 தொடக்கம் மாற்று செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியேற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.