அரச சேவை புதிய ஆட்சேர்ப்பு தொடர்பில் பாராளுமன்றில் கல்வி அமைச்சர் தகவல்

அரச சேவை புதிய ஆட்சேர்ப்பு தொடர்பில் பாராளுமன்றில் கல்வி அமைச்சர் தகவல்

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறி, தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் நேற்றையம் தினம் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன, குறித்த நியமனங்களை பின்னர் வழங்குவது பொருத்தமானதாகும் என முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் மத்திய மாகாண செயலாளருக்கு சுற்றுநிருபம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த சுற்று நிருபமே குறித்த நியமனங்களை வழங்குவதற்கு தடையாகவுள்ளது. மத்திய மாகாணம் மாத்திரம் இன்றி நாடளாவிய ரீதியில் புதிய நியமனங்கள் வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த நியமனங்கள் ஏனைய மாகாணங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை விரைவில் பெற்றுக்கொள்ளவும் கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றதும், அவர்களை விரைவில் சேவையில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இந்த விடயம் மத்திய மாகாண சபையின் கீழ் உள்ளது.

இருப்பினும், குறித்த நியமனங்களை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் அழுத்தம் வழங்கும். நாட்டின் நிதி நிலையும் எதிர்காலத்தில் சீரடையும் என நம்பிக்கையுள்ள நிலையில், மலையக மக்களின் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டை கருத்திற்கொண்டு மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களின் நியமனங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயம் யாதெனில், அரசாங்கத்தினால் புதிய ஆட்சேர்ப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல் ஆகும்.

இந்த அறிவித்தலை அடுத்து மத்திய மாகாணத்திற்கு மாத்திரமல்ல அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஆட்சேர்ப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்த நிதி அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. நாட்டில் தற்போது நிலவும் மோசமான நிதி நிலை காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஏனைய மாவட்டங்களில் இதற்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டு, ஆட்சேர்ப்பு இடம்பெற்றது. எனவே உங்களது மாகாணத்திற்கும் இந்த நியமனத்திற்கான கோரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டிருக்கின்றது. கல்வி அமைச்சு என்ற அடிப்படையும் நாங்கள் கோரி இருக்கின்றோம். இந்த அனுமதியை விரைவாக வழங்குமாறு கூறியிருக்கின்றோம். அனுமதி கிடைத்ததன் பின்னர் மீண்டும் ஆட்சேர்ப்பு செய்ய முடியும். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image