ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பில் நிதி அமைச்சரின் உறுதிமொழி
நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருக்கின்ற ஆசிரிய உதவியாளர்களின் நியமனம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் நேற்று (22) வெளியிட்டுள்ள பதிவில்,
நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருக்கின்ற ஆசிரிய உதவியாளர்களின் நியமனம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் ஒன்றை இன்று (22) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் கையளித்தேன்.
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவானது எந்தவிதத்திலும் போதாது என்பதை சுட்டிக்காட்டியதுடன் அவருடைய அமைச்சினால் அனுப்பப்பட்ட சுற்று நிரூபமே இந்த நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தடையாக இருக்கிறது என்பதையும் இதன் போது நான் வழங்கிய கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தேன்.
எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு இன்றைய பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அந்த உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தையும் சம்பள அதிகரிப்பையும் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் இந்த கடிதத்தில் நான் எனது கோரிக்கையை முன் வைத்திருந்தேன்.
மேலும் இந்த விடயம் மத்திய மாகாண ஆளுநர் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டு இருப்பதாகவும் அந்த முட்டுக்கட்டையை நீக்கி நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்த போது அதனை அமைச்சர் ஏற்றுக் கொண்டதுடன் இது தொடர்பான நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தார்.