ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி பணிப்புரை

ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி பணிப்புரை

அனைத்து அரச ஊழியர்களுக்கும் திருப்திகரமான தொழிலுக்கு அவசியமான பின்னணி தயார் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.


ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக பதவி உயர்வு நடவடிக்கைகளில் நிலவுகின்ற பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கொழும்பு தெமட்டகொடையில் அமைந்துள்ள புகையிரத திணைக்களத்தின் பிரதான பொறியியல் தள உப திணைக்களம் மற்றும் மாளிகாவத்தை புகையிரதத் தளத்தை நேற்று முன்தினம் (16) பார்வையிட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நிறுவனங்களின் நாளாந்த செயற்பாடுகளை அவதானித்த ஜனாதிபதி, தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஊழியர்களிடம் தகவல்களைக் கேட்டறிந்தார்.

புகையிரத இன்ஜின்கள் மற்றும் வேகன்களை பரீட்சித்து, பொருத்தமான முறையில் பொறுத்துதல், பயணிப்பதற்காக இணைத்தல் ஆகியவை பொறியியல் தள உப திணைக்களத்தின் முதன்மைப் பணியாகும்.

வழக்கமான பழுதுபார்ப்புகளைச் செய்தல், இயந்திரப் பொறியியலாளர்களுக்கு மேம்படுத்துதல்களைப் பரிந்துரைத்தல், புதிதாகப் பயணிக்க இணைக்கப்படும் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளை பரீட்சித்து தரத்தை உறுதி செய்தல், புகையிரதப் பாதையில் ஏற்படும் விபத்துக்கள், தடம்புரள்வு அல்லது வேறு அனர்த்தங்களின் போது மீண்டும் சீர் செய்து புகையிரதத்தை பயணிக்கச் செய்தல் போன்றவை நிறுவனத்தின் பொறுப்புகளில் அடங்குகின்றது.

புகையிரதப் பெட்டிகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை நிறுவனம் மேற்கொள்கிறது. கொழும்பில் உள்ள 05 பிரதான தளங்கள், 02 யார்டுகள் மற்றும் கொழும்பிற்கு வெளியே சுமார் 15 தளங்களையும் திணைக்களம் கொண்டுள்ளது.

வெற்றிடங்களாகும் தொழிநுட்பக் கடமைகளுக்கு, சிற்றூழியர்களை ஈடுபடுத்துதல் காரணமாக ஊழியர்களுக்கு மத்தியில் அதிருப்தி நிலை தோன்றியுள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். திறமையான இளம் தொழிலாளர்களை இலங்கை - ஜேர்மன் புகையிரத பயிற்சி நிறுவனம் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பி, பயிற்சி வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்து அதற்கேற்ப முறையான பதவி உயர்வு முறையை உருவாக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

எரிபொருள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு புகையிரதங்களைப் பயன்படுத்துவதன் நன்மைகளைத் தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

பழுதடைந்த புகையிரதப் பெட்டிகளை திருத்தும் பணியினை மேற்கொண்டுவரும் தெமட்டகொடை ஆராமய வீதியிலுள்ள தன்த்திரீ டேலர் (தனியார்) நிறுவனத்தின் இயந்திரவியல் தளத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், புகையிரதத் திணைக்கள பிரதானிகள் மற்றும் அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image