காலாவதியாகவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்தத் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிவித்தலில்,
கொவிட் பரவல் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மூடப்பட்டிருந்தமையால், சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் காலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டது. இதன் காரணமாக பெருமளவான சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒரே சந்தர்ப்பத்தில் புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது திணைக்களத்தினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு எண்ணிக்கையில் பெருமளவான சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1000 ரூபா சம்பள உயர்வு விடயத்தில் அடுத்தக் கட்டம் என்ன? தொழில் அமைச்சரின் அறிவிப்பு
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், காலாவதியாகும் தினத்திலிருந்து, மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜுலை மாதம் முதலாம் திகதி தொடக்கம், செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், காலாவதியாகும் தினத்திலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி சந்தர்ப்பமாக இந்தக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால், குறித்த சலுகைக் காலத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதேநேரம் நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு ஒதுக்க நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான அட்டைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கான தற்காலிக ஏற்பாடாக, சாரதி அனுமதி அட்டைக்கு பதிலாக ஒரு வருடத்திற்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக சாரதி அனுமதி அட்டைக்காக, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்கூடிய கணினி உள்ளீட்டை, காவல்துறை திணைக்களத்தினால் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக ஒரு வருட செல்லுபடியாகும் காலத்துடன்கூடிய தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை அஞ்சல் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போதைய நிலைமை சீரானதன் பின்னர், சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிட்டு, விண்ணப்பதாரர்கள் தங்களின் வீடுகளுக்கே அதனைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.