1000 ரூபா சம்பள உயர்வு விடயத்தில் அடுத்தக் கட்டம் என்ன? தொழில் அமைச்சரின் அறிவிப்பு
தொழிற்சங்கங்களிடையே ஒற்றுமையின்மை காரணமாக இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாரிய துன்பத்தை எதிர்நோக்குவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (07) தொழில் அமைச்சுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் இதனைக் கூறியதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
செங்கொடி சங்கம் மற்றும் இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் உள்ளிட்ட தரப்பினர் அமைச்சரை சந்தித்துள்ளனர்.
ஆசிரியர் சேவைக்கு பயிலுநர்களாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கோரல்
இதன்போது கருத்து தெரிவித்துள்ள தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,
சுமார் 20 ஆண்டு காலமாக பெருந்தோட்டத்துறையில் கூட்டு ஒப்பந்தம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஆயிரம் ரூபா வேதனம் தொடர்பான பிரச்சினையின்போது, தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமையால், வேதன நிர்ணய சபையின் ஊடாக அந்த வேதனத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எவ்வாறிருப்பினும், அரசாங்கம் மேற்கொண்ட அந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றை நாடியுள்ளன. இதுதொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக எந்தவகையிலும் தமக்கு புதிய சட்ட திட்டங்களை கொண்டு வரவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ முடியாது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் ஒரே நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். தொழிற்சங்கங்களிடையே ஒற்றுமையின்மை காரணமாக இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாரிய துன்பத்தை எதிர்நோக்குகின்றனர்.
நீதிமன்ற நடவடிக்கை நிறைவடைந்ததன் பின்னர் ஆயிரம் ரூபாய் வேதனம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கமைய பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலனுக்கு ஏற்றவாறான பல தீர்மானங்களை மேற்கொள்ள தாம் தயார் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.