கரும்பு உற்பத்தியாளர்கள் கரும்பின் கொள்வனவு விலையை அதிகரிக்குமாறு கோரி நேற்று (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு டொன் கரும்புக்கான விலையை 2000 ரூபாவால் அதிகரிக்குமாறு செவனகல சீனி உற்பத்தித் தொழிற்சாலை முகாமையாளருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 600 கரும்பு உற்பத்தியாளர்கள் செவனகல டங்டுவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் செவனகல லங்கா சீனி உற்பத்தித் தொழிற்சாலைக்கு முன்பாக சென்று ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். அதன் பின்னர் தொழிற்சாலை நிருவாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு சிலருக்கு வழங்கப்பட்டபோதிலும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரும்பு உற்பத்தியில் இருந்து தாம் விலகிக்கொள்ளப்போவதாக கரும்பு உற்பத்தியாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் போர்க் லிப்ட் சாரதி மீது தாக்குதல் நடத்த முற்பட்டதையடுத்து நிலைமை மோசமடைந்ததாகவும் குறித்த சாரதியியூடாக போர்க் லிப்ட்டை பயன்படுத்தி இரும்பு தூண்களை எடுத்து வந்து ஒரு பகுதியை நுழைவாயிலை திறக்கவிடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மூடினர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.