ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் வழக்குகள் தீர்க்கப்படாதுள்ளன- அமைச்சர்
தொழிலாளர் இழப்பீடு ஆணையாளரின் அதிகாரங்களை தொழிலாளர் தீர்ப்பாய சபைக்கு மாற்ற எதிர்பார்ப்பதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் இழப்பீடு தொடர்பான ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தாமதமாகி வருவதாகவும், அனைத்து வழக்குகளையும் தீர்க்க ஒரே ஒரு ஆணையாளர் மாத்திரமே இருப்பதாகவும் இந்நிலையில் ஆணையாளர் தட்டச்சுப்பொறியை காரில் வைத்துக்கொண்டு நாடு சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..
“பதினாறாயிரம் தொழிலாளர் வழக்குகள் தாமதமாகின்றன. தொழிலாளர் இழப்பீட்டு ஆணையாளர் அலுவலகம் குறித்து தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்திலிருந்து நல்ல விமர்சனம் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளது. ஒரு ஆணையாளர்தான் உள்ளார். அவர் தச்சுப்பொறி இயந்திரத்தை காரில் வைத்துக்கொண்டு நாடு முழுவதும் சுற்றவேண்டியுள்ளது. தொழிலாளர் இழப்பீட்டு ஆணையாளர் அதிகாரத்தை தொழிலாளர் தீர்ப்பாய சபைக்கு கையளிக்கப்பட்ட பின்னர் வழக்குகள் சீக்கிரம் நிறைவுக்கு கொண்டு வர முடியுமாகும். 44 தொழிலாளர் தீர்பாய அலுவலங்கள் உள்ளன. அவற்றுக்கிடையில் வழக்குகளை பகிர்ந்தளிக்க முடியும். அதற்கான சட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தொழிலாளர் வழக்குகளில் உரிய மேல்முறையீடுகளுக்காக வேறாக நீதிபதிகள் சிலர் இருந்தால் வழக்குகளை விரைவில் முடிக்கலாம். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.