தோட்டத் தொழிலாளர்கள் நாட்டுக்கு சுமையல்ல, சுமைத்தாங்கிகள்- பேராசிரியர் விஜேசந்திரன்

தோட்டத் தொழிலாளர்கள் நாட்டுக்கு சுமையல்ல, சுமைத்தாங்கிகள்- பேராசிரியர் விஜேசந்திரன்

எங்களுடைய தொழிலாளர்கள் இந்த நாட்டின் சுமைகள் அல்ல.சுமை தாங்கிகள்.  தோட்டத் தொழிலாளர்களுக்க தேவை உழைப்புக்கான ஊழியமே தவிர கோதுமை நிவாரணம் அல்ல என்று  என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் எங்களுடைய மக்களுக்கு தேவை மாணியம் அல்ல.அவர்களுக்கு சரியான வேலை நாட்களும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியமுமே.எங்களுடைய மக்கள் இந்த நாட்டிற்கு சுமை அல்ல அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கின்ற பாதுகாவலர்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாத இந்த அரசாங்கம் அவர்களை கொச்சைப்படுத்துகின்ற வகையில் கோதுமைக்கு மானியத்தை வழங்குகின்றது என்று இந்த செயற்பாடானது உழைக்கும் எங்கள் மக்களை ஏனைய சமூகங்களிடம் இருந்து தள்ளி வைத்து கொச்சைப்படுத்துவதாகவே நான் கருதுகின்றேன்.

இந்த நாட்டில் இருக்கின்ற சனத்தொகையில் பெருந்தோட்ட சமூகம் மாத்திரமா கோதுமை மாவை பயன்படுத்துகின்றது?என்ற கேள்வி எழுகின்றது.கோதுமை இறக்குமதியில் பெரும்பாலான பகுதி நகர்ப்புறங்களின் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.விசேடமாக பேக்கரி உற்பத்திகளுக்கே பயன்படுத்தப்படுகின்றது.

அவ்வாறனான ஒரு நிலைமையில் அரசாங்கம் ஏன் எங்களுடைய மக்களுக்கு மாத்திரம் கோதுமை மாவிற்கு மாணியம் வழங்குவதாக கூறி அவர்களை கொச்சைப்படுத்துகின்றது.

இன்றைய சுகாதார துறையினரின் அறிவுறுத்திலின்படி கோதுமை மாவினால் தயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம் என அறிவித்தல் வழங்குகின்றார்கள் ஆனால் அரசாங்கமோ எங்களுடைய மக்களுக்கு அதனை மாணியமாக வழங்குகின்றது.

ஏன் வேறு பொருட்கள் இல்லையா மாணியம் வழங்குவதற்கு.ஏதோ தோட்ட தொழிலாளர்கள் கோதுமை மாவிற்கு அடிமையாக இருப்பது போலவே இந்த செயல் இருக்கின்றது.

எங்களுடைய தொழிலாளர்கள் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டின் பொருளாதாரத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து இந்த மண்ணிலே மடிந்து போகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு இதுவரையில் இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.

மாறாக அவர்களுடைய உழைப்பில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை கூட பெற்றுக் கொடுக்க முடியாமல் கம்பனிகளின் ஆட்டத்திற்கு ஆடிக் கொண்டிருக்கின்றது இந்த அரசாங்கம்.

1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் அதனை சரியாக கம்பனிகள் வழங்குகின்றதா? சரியான வேலை நாட்கள் வழங்கப்படுகின்றதா? தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளும் பாதுகாப்பு முறையாக கிடைக்கின்றதா? போன்ற விடயங்களில் எந்தவிதமான அக்கறையும் செலுத்தாமல்.அதற்கு சரியான நடவடிக்கைகளை எடுக்காமல் வெறுமனே கோதுமைக்கு மாணியத்தை வழங்கி அவர்களை ஏமாற்றுகின்றது இந்த அரசாங்கம்.

எனவே இன்றைய சூழ்நிலையில் எங்களுடைய மக்களுக்கு தேவை மாணியம் அல்ல.அவர்;களுக்கு சரியான வேலை நாட்களும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியமுமே.எங்களுடைய மக்கள் இந்த நாட்டிற்கு சுமை அல்ல அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கின்ற பாதுகாவலர்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image