35 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கத் துறையில் பணியாற்றி, உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தொழிலாளர் தலைவர்கள் மற்றும் அரச சேவையில் ஈடுபட்டு தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக தமது சேவை காலத்தை அர்ப்பணித்த அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வில் அலரி மாளிகையில் இன்று (15) இடம்பெற்றது.
கௌரவிப்பு விழாவில், தொழிலாளர் சமூகத்தினருக்காக உன்னத சேவையாற்றிய 09 பிரபல தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இரண்டு அரசாங்க அதிகாரிகள் பிரதமரினால் கௌரவிக்கப்பட்டனர்.
தொழிற்சங்க தலைவர்களான மெரெஞ்ஞகே தயாரத்ன முனிதாச பெர்னாண்டோ (அகில இலங்கை மோட்டார் தொழிற்சங்கம்) லெஸ்லி ஷெல்டன் தேவேந்திர (இலங்கை சுதந்திர சேவை சங்கம்), சுப்பையா சுப்ரமணியம் ராமநாதன் (தோட்டத் தொழிலாளர் சங்கம்), ஹேம அமரதுங்க பியதாச (அகில இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் தொழிலாளர் சங்கம்), ரெங்கசாமி பழனிமுத்து (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்), விஜேவந்த பத்மசிறி அமரசிங்க (இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்), ரெங்கையா மருதமுத்து கிருஷ்ணசாமி (விவசாய மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம்), ஆறுமுகம் முத்துலிங்கம் (ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்), துவான் மன்சூர் ரஹீம் ரசிதீன் (இலங்கை தொழிலாளர் சம்மேளனம்) மற்றும் தொழில் அமைச்சின் செயலாளராக சேவையாற்றி தற்போது அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மஹிந்த மதிஹஹேவ மற்றும் தொழிலாளர் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற குணசிறி வீரகோன் ஆகியோர் கௌரவ பிரதமரிடம் கௌரவ பாராட்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
உழைக்கும் மக்களின் நலனை மேம்படுத்தி திருப்திகரமான இலங்கை உழைக்கும் மக்கள் சக்தியை உருவாக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொழில் அமைச்சராக இருந்தபோது முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிரம வாசனா நிதியத்தின் அனுசரணையில் தொழில் அமைச்சும், நிதி அமைச்சும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, காமினி லொகுகே, வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் டப்ளிவ்.டீ.ஜே.செனெவிரத்ன, தொழில் அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பதிரன, தேசிய லொத்தர் சபையின் தலைவர் லலித் பியும் பெரேரா, சிரம வாசனா நிதியத்தின் பணிப்பாளர்களான லலித் கன்னங்கர, சுதத் பண்டார, ஹிமாலி ஒருகொடவத்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.