ஆசிரியர் - அதிபர் சம்பள விடயத்தில் ஏமாற்றமா? மஹிந்த ஜயசிங்க வெளியிட்ட புதிய தகவல்
எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததனால் நாம் எமது போராட்டத்தை இடைநிறுத்தினோம்.
ஆனால் தற்போது சம்பளக் கோரிக்கைத் தொடர்பான எமது நிலைப்பாட்டை இழுத்தடித்து எம்மை ஏமாற்ற அரசாங்கம் முயல்வதாகவே தோன்றுகின்றது என இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்தத் தெரிவிக்கையில்,
நாம் கடந்த நான்கு மாதங்களாக ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டபோது அப்போராட்டத்திற்கு வட மாகாண ஆசிரியர்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியதால் போராட்டத்தை எவ்வித தளம்பளும் இல்லாமல் மேற்கொள்ளக்கூடியதாய் இருந்தது.
எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததனால் நாம் எமது போராட்டத்தை இடைநிறுத்தினோம். ஆனால் தற்போது சம்பளக் கோரிக்கைத் தொடர்பான எமது நிலைப்பாட்டடை இழுத்தடித்து எம்மை ஏமாற்ற அரசாங்கம் முயல்வதாகவே தோன்றுகின்றது.
எனவே 10.12.2021 இற்கு முதல் நாம் முன்வைத்த சம்பள உயர்வை வழங்காவிட்டால் 20.01.2022 இல் நாம் அரசுக்கெதிராக ஒரு பாரிய போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.
நம்முடைய மேற்படி போராட்டத்தின்போது ஆரம்பத்தில் அரசாங்கம் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் கல்வி நிர்வாகச் சேவையில் உள்ளவர்களைப் பதில் கடமையில் ஈடுபடுத்தவிருப்பதாகவும் பயமுறித்தியிருந்தார்கள்.
ஆதலால் நாம் போராடிப்பெற்ற சம்பள உயர்வை எம்மை ஏமாளிகளாக்காமல் வழங்கவேண்டும். இல்லையேல் நாம் இதுவரையில் போராடியதைவிடத் தீவிரமாகப் போராடுவதற்குத் தயாராகவேயுள்ளோம்.
அதிகாரிகள், அரசியல்வாதிகளின் எமக்கெதிரான சகல தலையீடுகளுக்கும், தடைவிதிப்புகளுக்கும் எதிராகவும் முகம்கொடுத்து இப்போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். என்பதையும் அறியத் தருகின்றோம்.
மேலும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தில் பங்கேற்கவேண்டுமெனவும் அறைகூவுகின்றோம்.
அத்தோடு 2ஃ3 பெரும்பான்மைப் பலத்தோடு ஆட்சிக்கு வந்த தற்போதைய ஆட்சியில் கேஸ் சிலிண்டர் பிரச்சினை பூதகரமாகவுள்ளமையுந் தெரிந்ததே. மேலும், ஆசிரியர் பிரச்சினை மட்டுமல்ல விவசாயிகளின் பிரச்சினை, விலைவாசி உயர்வு போன்றவற்றாலும் நாடும் மக்களும் நெருக்கடிகளாகியுள்ளமை மட்டுமல்லாமல் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்னும் சிங்கள பௌத்த இனவெறியை உள்ளடக்கமாகக்கொண்ட புதிய கட்டமைப்பொன்றும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவவ்hறான பிரச்சினைகளையிட்டும் இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு போராட முன்வரவேண்டுமெனவும் அறைகூவுகின்றோம்.
அரசாங்கம் ஊடகவியலாளர்கள் உண்மையை வெளியிடும்போது அவர்களை பயமுறுத்தியும், அவர்கள் மீது தாக்குதலைத் தொடுத்தும் ஊடக சுதந்திரத்தை நசுக்குவதோடு தனது மக்கள் விரோத ஆட்சியையும் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்கும் முனைகின்றது. என விசனம் வெளியிட்டதோடு ஊடகவியலாளர்கள் எவ்வித அடக்குமுறைக்கும் அஞ்சாது தமது கடமைகளை மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளவேண்டுமெனவும் வேண்டிக்கொண்டிருந்தார்.
முடிவாக இலங்கையில் உண்மையான ஆட்சியொன்றைத் தோற்றுவிப்பதற்கு இடதுசரித்துவ ஆட்சியை இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பினரும் தெரிவுசெய்யவேண்டுமெனவும் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.