முரண்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

முரண்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நல்லாட்சி அரசாங்கத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கிய 7பேர்ச் காணிகளில், அவர்கள் சொந்தமாக வீடு கட்டிக்கொள்வதற்கு இடமளிக்கவேண்டும்.

அதேபோன்று மேலும் 1,014 குடும்பங்களுக்கு காணி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருந்தோம். அந்த மக்களுக்கு அந்த காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் கம்பனி உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் முரண்பாடை தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (27) இடம்பெற்ற பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, காணி அமைச்சு உள்ளிட்ட 3 இராஜாங்க அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்த்துறைத் தொடர்பில் கடந்த காலங்களில் பின்பற்றிவந்த பிழையான தீர்மானங்களே நாட்டில் டொலர் பிரச்சினைக்கு காரணமாகும். 1970, 80 காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறை மூலம் நாட்டுக்கு கூடுதலான டொலர்களை பெற்றுக்கொடுத்து வந்தது. ஆனால் 1980 காப்பகுதிக்கு பின்னர் பெருந்தோட்டத்துறையை கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட பிழையான கொள்கை காரணமாக பெருந்தோட்டத்துறையை கட்டியெழுப்ப முடியாமல்போனது.

பெருந்தோட்டத்துறையில் பிரதானமானது தேயிலை உற்பத்தியாகும். அதன் பின்னர் இறப்பர் உற்பத்தி. அப்படியாயின் பெருந்தோட்டத்துறையை கட்டியெழுப்ப எடுக்க இருக்கும் திட்டம் என்ன? அத்துடன் 2010 இல் தேயிலை உற்பத்தி 331கிலோ மில்லியனாக இருந்தது. 2020இலும் சுமார் இந்தளவு உற்பத்தியே இடம்பெற்றிருக்கின்றது. ஆனால் பெருந்தோட்டத்துறையில் சுமார் ஒரு இலட்சம் ஹெக்டயாரில் தேயிலை உற்பத்தி செய்யப்படாமல் இருக்கின்றது.

ஆனால் அதேநேரம் சிறுதோட்டங்களில் 80ஆயிரம் ஹெக்டயாரில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது. அதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடையாமல் இருந்து வருகின்றது. அதனால் பெருந்தோட்டத்துறையை கட்டியெழுப்ப உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் பெருந்தோட்ட காணிகளை சிறுதோட்ட திட்டத்துக்கமைய அந்த பிரதேச மக்களுக்கு வழங்கவேண்டும்.

இது புதிய வேலைத்திட்டமாகும் இந்த திட்டத்தை எந்தவொரு அமைச்சரும் பின்பற்றவில்லை. மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட கம்பனி உரிமையாளர்களுக்கு இடையில் சம்பளம் மற்றும் காணி தொடர்பாக தொடர்ந்து முரண்பாடு இடம்பெற்றுவருகின்றது. இந்த பிரச்சினையை முடிக்குகொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக தோட்ட கம்பனிகள், தொழிற்சங்கள் என அனைத்து தரப்பினரையும் ஒரு இடத்துக்கு கொண்டுவந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். என்றாலும் இந்த பிரச்சினை தொடர்பாக பெருந்தோட்டத்துறை கண்டும் காணாதுபோல் இருப்பதாகவே எமக்கு தெரிகின்றது. அதனால் இந்த பிரச்சினையை விரைவாக தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்

மேலும் கடந்த அரசாங்கத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு அவர்கள் வாழ்ந்துவரும் இடத்தில் 7பேச் காணி வழங்கி அவர்களுக்கு வீடு கட்டிக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. அதற்கான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் 960 குடும்பங்களுக்கு 7பேர்ச் காணி வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று 1,014 குடும்பங்களுக்கு காணி வழங்குவதற்கான அளவை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. அதனால் அந்த மக்கள் வாழ்வதற்கு வீடுடொன்றை கட்டிகொள்வதற்கான உரிமையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 7பேர்ச் காணிக்கு உரித்துரைமை பத்திரமும் பெற்றுக்கொடுத்திருக்கின்றோம். – என்றார்.

(வீரகேசரி)

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image