அரச அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி கருத்து

அரச அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி கருத்து

எமது நாட்டின் விவசாயத் துறையை முழுமையாகச் சேதன விவசாயத்துக்கு மாற்றுவதற்கான பசுமை விவசாயக் கொள்கையில் - எவ்வித மாற்றமும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெரும்போகச் செய்கை மற்றும் சேதனைப் பசளை விநியோகம் தொடர்பாக, நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் முகநூல் பக்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சேதனப் பசளை விநியோகம் மற்றும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் - சேதன விவசாயத்துக்கு மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்பதனையும் நான் இன்று தெளிவுபடுத்தினேன்.

இந்த விடயத்தில் விவசாயிகளுக்கான போதிய தெளிவூட்டல்களை வழங்கப்பட வேண்டும்.

அதேபோன்று, மேற்படி விடயங்களைச் செயற்படுத்தும் போது இடம்பெறக்கூடிய இரசாயனப் பசளை மாஃபியா தொடர்பிலும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

அதற்காகப் போராடி, சரியானதை வெற்றிகொள்வதற்கு, அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அத்தியாவசியம் என்பதனையும் நான் எடுத்துரைத்தேன்.

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும், நெல் உட்பட ஏனைய பயிர்ச் செய்கைகள் தொடர்பான விவரங்களை, மாவட்ட ரீதியில் அதிகாரிகளிடம் நான் கேட்டறிந்துகொண்டேன்.

நாட்டில் நிலவிய அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மரக்கறி உள்ளிட்ட பெரும்பாலான பயிர்களின் அறுவடைகள் குறைந்துள்ளமை தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன், சேதனப் பசளை விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பெரும்போகத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இருப்பினும், மாவட்ட ரீதியில் பார்க்குமிடத்து, பயிர்ச் செய்கை நிலங்களில் 70 வீதமானவற்றில் பயிரிடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டங்களை நடத்துவதற்கும் பயிர்ச் செய்கைகளை அவர்கள் தாமதப்படுத்துவதற்கும் காரணம் அவர்களுக்கான போதிய தெளிவூட்டல்கள் வழங்கப்படாமையாகும் என்பதனை நான் அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினேன்.

அவ்வாறு விவசாயிகளைத் தெளிவுபடுத்தாமை தொடர்பாக, உரிய அதிகாரிகளிடம் எனது அதிருப்தியை நான் வெளிப்படுத்தியதுடன். போராட்டங்களை முன்னெடுக்கும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு, பசுமை விவசாயக் கொள்கையில் இருந்துகொண்டே தீர்வுகளைக் காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையும் நான் வலியுறுத்தினேன்.

அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்காத அதிகாரிகள் விலகிச் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை என்பதனையும் அவர்களுக்கு நான் நினைவூட்டினேன். மனசாட்சியின்படி தெளிவாக வேலை செய்யக்கூடிய குழு ஒன்றால் மாத்திரமே, இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பதையும் நான் அவர்களுடம் சுட்டிக்காட்டினேன்.

அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்க்ஷ, ஆளுநர்களான மார்ஷல் ஒஃப் தி எயார்ஃபோஸ் ரொஷான் குணதிலக்க, அநுராதா யஹம்பத், விவசாயத்துறை அமைச்சு அதனோடு இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள், சேதனப் பசளை உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர், இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image