பல்வேறு கோரிகைகளை முன்வைத்து ரங்கல தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
மத்திய மாகாணத்தின் கண்டி ரங்கல தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் நேற்று (15) திங்கட்கிழமை ஈடுப்பட்டனர்.
கடந்த காலங்களில் தமது வயது மூப்பின் காரணமாக தொழிலை நிறைவு செய்து கொண்ட தோட்ட தொழிலாளர்களுக்கான பணிக்கொடை இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்று இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட முதியவர்கள் தெரிவித்தனர். பணிக்கொடை பெறாது சிலர் இவ் உலக வாழ்க்கையில் இருந்தும் விடைப்பெற்றுள்ளதாக இவர்கள் தெரிவித்தனர்.
1980 முதல் 2014 வரை தோட்ட தொழில் ஈடுப்பட்ட தமக்கு இதுவரை பணிக்கொடை கிடைக்காததன் காரணமாக தாம் வாழ்வதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் தமக்கான மருத்துவ தேவையையேனும் பூர்த்தி செய்ய முடியாது தாம் திண்டாடுவதாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஓர் மூதாட்டி தெரிவித்தார்.
தேயிலை மலைகள் எல்லாம் புற்கள் வளர்ந்து காடு போல் உள்ள நிலையில் தின சம்பளத்திற்கு 25 கிலோகிராம் தேயிலை பறிக்கும்படி முகாமைத்துவம் அழுத்தம் கொடுக்கும் நிலையில் தம்மால் அதனை பூரத்தி செய்ய முடியாது உள்ளதால் தேயிலை மலைகளின் புற்களை அகற்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
பல குடும்பங்கள் எட்டடி அறையில் வாழ்கையை கொண்டு நடாத்துவதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்குவதுடன் குடும்ப சச்சரவுகளும் ஏற்படுவதானால் தமது குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படைவதுடன் அவர்கள் முரண்பாடான பழக்க வழங்கங்களை உள்வாங்கி கொள்வதால் தமக்கு வீடுகளை அமைத்து கொள்வதாற்கான காணிகளை பெற்றுக் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சுமார் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றதுடன் தமது இந்த கோரிக்கைகளை உடன் நிறைவேற்றாவிட்டால் தாம் பணிகிஸ்கரிப்பை தொடரவேண்டி வரும் என்றும் தெரிவித்தனர்.