இறுதித் தவணை நீடிப்பு? தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்த காலம்
கொரோனா வைரஸ் காரணமாகத் தவறவிடப்பட்ட பாடநெறிகளை 20 வாரங்களுக்குள் முழுமைப்படுத்துவது தொடர்பில், தேசிய கல்வி நிறுவகத்தினால் கல்வி அமைச்சுக்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வருடத்துக்கான இறுதி பாடசாலை தவணையை, அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்குமாறு, தேசிய கல்வி நிறுவகத்தினால் கல்வி அமைச்சுக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்துவதற்காகவும், பரீட்சைகளை நடத்துவதற்கான காலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான பிரத்தியேக வகுப்புக்களை அதிகபட்சமாக 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்குப் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில், தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம் - சூரியன் செய்திகள்