இலங்கை மின்சார சபை, துறைமுக அதிகார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து போராட்டம்
இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 3ம் திகதி பிற்பகல் 12.00 மணிக்கு அந்ததந்த அலுவலகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.
மூன்று அரச நிறுவனங்களின் மூன்று தலைமையகங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
அரசுடன் தொடர்புபட்ட பல பிரச்சினைகளுக்கு எதிராக இப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கெரவலப்பிட்டியவில் உள்ள யுகதனவி திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான New Fortress Energy Inc உடனான ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி CEB தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சாரசபையை அமெரிக்காவிற்கு விற்றுவிட்டதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது, ஏனெனில் நிதியமைச்சர் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறிவிட்டார் மற்றும் இந்த ஒப்பந்தம் பற்றி அவருக்குத் தெரியாது என்றும் கூறுகிறார்.
இலங்கை மின்சாரசபையின் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு கடந்த 29ம் திகதி பிற்பகல் 12.00 மணிக்கு நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
யுகதனவி திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையத்தில் இலங்கையின் 40% பங்குகளை New Fortress Energy Inc நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. இம்மாதம் 3ம் திகதிக்கு முன்னர் இவ்வொப்பந்தம் ரத்து செய்யப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்லவேண்டியிருக்கும் என்று ரஞ்சன் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இலங்கை மின்சார சபையை தவிர்த்து அரசாங்கம் எரிபொருள் மற்றும் துறைமுக சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் அர்த்தம் அரசாங்கம் இலங்கை மின்சாரசபையை தனது கட்டுப்பாட்டில் இருந்து அகற்றியுள்ளது" என்பதாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கத் தூதுவர் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவருடன் நடத்திய கலந்துரையாடலை மேற்கோள்காட்டி, இலங்கையின் எரிசக்தி துறையில் தலையிட அமெரிக்காவிற்கு யார் அதிகாரம் அளித்தது என்பதில் தீவிர அக்கறை இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, 13 ஏக்கர் துறைமுக காணியை சீன நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
எஞ்சியுள்ள வளங்களை விற்பனை செய்வதற்கு அல்லது குத்தகைக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு துறைமுக தொழிற்சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்தக் கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஜெயலால் தெரிவித்தார்.
எண்ணெய் தொட்டிகளை பாதுகாக்கக் கோரி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் ரஞ்சன் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.