அரசாங்கத்தின் வெறுப்புப்பேச்சே ஆசிரியர் - அதிபர் போராட்டம் தீவிரமடையக் காரணம்
பலவந்தமான முறையில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர முடியாது.
தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே ஆசிரியர்-அதிபர் சேவைக்கு குறைந்தளவு மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
அரசாங்கத்தின் ஒரு சில உறுப்பினர்களது வெறுக்கத்தக்க பேச்சுக்கள் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
காலி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் 200இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் முதற்கட்டமாக திறக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறந்து கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர்செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானது. சுமார் 24 வருடகாலமாக சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தீர்வு காண முயற்சித்த போதும், அம் முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை ஆளும்தரப்பில் உள்ள ஒரு சில உறுப்பினர்கள் தான் தீவிரப்படுத்தினார்கள்.
ஆசிரியர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை குறிப்பிட்டு ஆசிரியர்-அதிபர்களுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.
தற்போதும் தேவையற்ற கருத்துக்களை அரசியல் அனுபவமில்லாத பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள் - என்றார்.
மூலம் - வீரகேசரி