ஆசிரியர் அதிபர் பிரச்சினை குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து

ஆசிரியர் அதிபர் பிரச்சினை குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து
எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பு ஹோமாகம மற்றும் பாதுக்க முதலான பகுதிகளில் உள்ள சில பாடசாலைகளுக்கு நேற்று (16) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
 
அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,
 
21ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்காக பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோர் ஊடாக சிரமதானத்தின் மூலம் பணிகளை ஏற்பாடு செய்யும் நடவடிக்கை தான் இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
 
24 ஆண்டு காலமாக தீர்க்கப்படாதிருந்த ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு, ஜனாதிபதியும், பிரதமரும், நிதி அமைச்சரும் மிகத்தெளிவான வாக்குறுதியை வழங்கி இருக்கின்றனர்.  வரவு-செலவுத் திட்டத்தில் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
 
நான் முன்னாள் கல்வியமைச்சர். அந்த ஐந்து வருட காலப்பகுதியில்,  இலங்கையில் அதிபர் ஆசிரியர்கள் ஒரு மணிநேரம்கூட கடமைகளில் இருந்து தவறாது தங்களுடைய தேசிய கடமையையும், பொறுப்பையும் நிறைவேற்றினர்.
 
ஆனால், துரதிஸ்டவசமாக இந்த பிரச்சினை தொடர்பில் செவிமடுத்து,  பிரச்சினையை தீர்ப்பதற்காக யோசனை முன்வைக்கப்பட்ட பின்னரும்,  பெற்றோர்களை தடுத்து வைத்துக்கொள்ள முடியும் என ஆசிரியர்கள் நினைப்பார்களாயின் அவ்வாறு செய்ய முடியாது என்பதே இன்று உறுதியாகி உள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image