கொவிட் தொற்றினால் வீடுகளில் சிகிச்சைப்பெரும் அரச ஊழியர்களுக்கு இழப்பீடு
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின்போது பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
2016ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்து கொண்டவர்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது இழந்த ஓய்வூதிய கொடுப்பனவை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஆராயுமாறு அரச சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு குறித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு ஏற்ப ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதேநேரம், தொடருந்து திணைக்களத்தின் கொள்முதல்களில் காணப்படும் சில முறைகேடுகள் தொடர்பிலும் இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.
கொவிட் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், அரச நிறுவனங்களின் செலவுகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், தொடருந்து திணைக்களத்தினுள் காணப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலின்போது அமைச்சர்களான காமினி லொகுகே, நிமல் சிறிபால த சில்வா, அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, தொழில் அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே. மாபா பதிரண, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி குமாரி அத்தநாயக்க, தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜுட் நிலூக்ஷன், முற்போக்கு தொழிற்சங்க தேசிய மத்திய நிலையம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.