பால்மா, கோதுமை மா, கேஸ், சீமெந்து விலையை அதிகரிக்க அனுமதி

பால்மா,  கோதுமை மா, கேஸ், சீமெந்து விலையை அதிகரிக்க அனுமதி

பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்கை செலவுகள் குழு  நேற்று அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீர்மானத்தை அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்க உத்தேசித்துள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், அரிசி மற்றும் சிறுவர் பால்மா என்பவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்கை செலவுகள் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா 200 ரூபாவாலும், கோதுமைமாவை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடை 50 ரூபாவாலும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சமையல் எரிவாயுவின் விலையை 550 ருபாவால் அதிகரிக்க வாழ்கை செலவுகள் குழு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ள அமைச்சரவையினால் தீர்மானிக்கப்படவுள்ளது.

வரி நிவாரணங்களை வழங்கக்கூடிய வாய்ப்புகள் தொடர்பில் அமைச்சரவை ஆராயக் கூடும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். 

வாழ்க்கை செலவுகள் குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட விலைகள் அமைச்சரவையினால் நடைமுறைப்படுத்தப்படுமாயின் பால்மா ஒரு கிலோகிராமின் விலை ஆயிரத்து 145 ரூபாவாகும். 50 கிலோகிராம் சீமெந்து மூடையின் விலை ஆயிரத்து 50 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், 200 ரூபா அதிகரிப்பின் கீழ் சந்தைக்கு பால்மாவை சாதாரண விநியோகத்தை மேற்கொள்ள முடியாதென இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் உறுப்பினரான லக்ஷ்மன் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சிக்கு அமைய 350 ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image