நாடு திறக்கப்படும்போது அமுலாகும் சுகாதார வழிகாட்டல் தீர்மானம் இதோ
நாடு திறக்கப்படும்போது பிறப்பிக்கப்படும் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் முழுமையான திட்டம் தொடர்பில் கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணிக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பொருளாதாரத்தை இயக்குவோம்…
* பாடசாலைகளைத் திறப்பது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு…
* சுற்றுலா வலயங்களுக்கு அருகில் ஆயுர்வேத கொவிட் சிகிச்சை நிலையங்கள்…
* ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக சுதேச மருந்துப் பொதி விநியோகிக்க ரூ.6,000 மில்லியன்…
* தாமதமின்றி விமான நிலையத்தில் PCR பரிசோதனை…
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்கி நாட்டை மீண்டும் திறக்கும் போது பிறப்பிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை, முழுமையான திட்டமிடலுடன் தயாரிக்க, கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளது.
03 துறைகளின் கீழ் இந்தத் திட்டமிடல் தயாரிக்கப்பட உள்ளதோடு, அரச துறையைச் செயற்படுத்துவதற்கான முறைமைகளைத் தயாரிக்கும் பொறுப்பு பொது நிர்வாக அமைச்சிடமும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கான முறைமைகளைத் தயாரிக்கும் பொறுப்பு போக்குவரத்து அமைச்சிடமும், தனியார்த்துறைச் சேவைகளை நடத்துவதற்கான முறைமைகளைத் தயாரிக்கும் பொறுப்பு தொழிற்றுறை அமைச்சிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுகாதார நிபுணர் குழுக்கள் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டல்களின் கீழ், மேற்படி பொறுப்புவாய்ந்த அமைச்சுகளால் பரிந்துரைகள் வெளியிடப்படும்.
நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில், நேற்று (24) முற்பகல், கொவிட் ஒழிப்புக்கான செயலணியின் கூட்டம், வீடியோ தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
மேற்படி திட்டமிடல் செயற்படுத்தப்படும் போது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உள்ளூராட்சிமன்றங்கள், கிராமிய அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் ஊடகத்துறையின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, பெசில் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
கொவிட் சவால்களுக்கு மத்தியில், புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பொருளாதாரச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்ல, அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டிய பெசில் ராஜபக்ஷ, 2021 இரண்டாவது காலாண்டுப் பகுதியில், 12.3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தைப் பேணக் கிடைத்ததென்றும் நாட்டை மூடி வைத்திருப்பதால், மூன்றாவது காலாண்டில் அது 1 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதென்றும் 4ஆவது காலாண்டிலேனும், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகத்தை 3 சதவீதமாகப் பேணும் இலக்கை நோக்கிப் பயணிப்பது அத்தியாவசியமாகி உள்ளதென்றும் அவர் எடுத்துரைத்தார்.
எவ்வாறெனினும், இவ்வாண்டின் மொத்தப் பொருளாதார அபிவிருத்தி வீதத்தை 5 சதவீதமாகப் பேண எதிர்பார்ப்பதாகவும், அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கான பரிந்துரைகள், சுகாதார நிபுணர்கள் குழுவினால் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆளுநர்கள் மற்றும் மாகாண சுகாதாரப் பணிப்பாளர்களுக்கு, இந்தப் பரிந்துரைகளை நேரடியாக அனுப்பி வைக்குமாறு, உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.
பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, தடுப்பூசி ஏற்றல் பணிகள் முழுமையடையும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்று, யுனிசெஃப் உள்ளிட்ட சிறுவர்கள் தொடர்பான சர்வதேச அமைப்புகள் மற்றும் உள்நாட்டின் சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறுவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எவ்விதத் தடைகளுமின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமாயின், பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் என்பன விரைவாகத் திறக்கப்பட வேண்டுமென்றும் அதற்கான உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், பெற்றோரின் அர்ப்பணிப்பு மற்றும் அக்கறை போன்றன இதில் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும், விசேட வைத்திய நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.
பாடசாலைகளைச் சுத்தப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்கல் பணிகளுக்கு, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் நேரடிப் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆயுர்வேத கொவிட் சிகிச்சை மத்திய நிலைய முறைமையின் முக்கியத்துவம் பற்றியும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. சுற்றுலாத்துறை அபிவிருத்தியை இலக்கு வைத்து, சுற்றுலா வலயங்களுக்கு அருகில் புதிய ஆயுர்வேத கொவிட் சிகிச்சை நிலையங்களை நிறுவுவது தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கொவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், சுதேச ஔடதங்களுக்கு, சர்வதேச ரீதியில் பெரும் கேள்வி நிலவுகின்றது. அதனால், ஔடத ஏற்றுமதியில் காணப்படும் தடைகளை நீக்கி, நேரடித் திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
சுதேச மருத்துவ அமைச்சினால், நாடு முழுவதிலுமுள்ள வீடுகளுக்கு இலவசமாக விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சுதேச மருந்துப் பெட்டிக்கான அனைத்துத் திட்டமிடல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, அதற்காக 6,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
விமான நிலையங்களினூடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளில் தாமதம் ஏற்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லையென்று எடுத்துரைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பரிசோதனை மத்திய நிலையத்தின் நடவடிக்கைகள் நாளைய தினம் (இன்று) ஆரம்பிக்கப்படும் என்றும் அதனால், பரிசோதனை நடவடிக்கைகள் மேலும் விரைந்து நடத்தப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை PCR பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், எந்தவிதத் தடுத்து வைப்புகளுமின்றி, தெரிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள், அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் அறிக்கை, சுமார் 2 - 3 மணித்தியாலங்களுக்குள் விநியோகிக்கப்படுவதால், இதன்போது எவருக்கேனும் தொற்று உறுதியானால், உரிய பொதுச் சுகாதார அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும், இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றலின் வெற்றிகரமான நடவடிக்கை தொடர்பிலும், இந்தக் கூட்டத்தின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
12 – 19 வயதுக்கிடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்குரிய தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள், கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை, அநுராதபுரம் மற்றும் குருநாகல் பொது வைத்தியசாலைகளில் இன்று ஆரம்பிக்கப்பட்டன என்று, விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில், பொதுமக்களிடையே மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளதென்று தெரிவித்த அவர், 20 – 29 வயதுக்கிடைப்பட்ட இளைஞர், யுவதிகள், சுய விருப்பின் பேரில் முன்வந்து தடுப்பூசி ஏற்றிக்கொள்வது, சாதகமான சூழ்நிலையாகக் காணப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.
அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாரச்சி, மஹிந்தானந்த அழுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, ரமேஸ் பதிரண, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சிசிர ஜயகொடி, சன்ன ஜயசுமன, நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன ஆகியோரும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணியின் உறுப்பினர்கள், மாகாண மற்றும் பிரதேச சுகாதாரப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
24.09.2021