பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான செயன்முறையினை சிபார்சு செய்யும் நோக்கில் கொவிட் 19 தடுக்கும் ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து தொழில்நுட்ப குழுவொன்றை ஸ்தாபித்துள்ளதாகவும், குழு எடுக்கின்ற தீர்மானங்களுக்கமைவாக எதிர்வரும் காலங்களில் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
கொவிட் தொற்றினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தவுடன் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டே செயலாளர் இதனை தெரிவித்தார்.
12 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் இன்மையினால் கொவிட் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் போது 1-5 வரையான தரங்களை கொண்ட 3,884 பாடசாலைகள் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்படும்.
தொழில்நுட்ப குழுவின் சிபார்சுகள் கிடைத்தவுடனேயே 12-15 வயதுடைய மற்றும் 16-19 இடைப்பட்ட வயதுப் பிரிவுகளிலுள்ள பிள்ளைகளுக்கு குழந்தை நோய்கள் விசேட மருத்துவர்களின் பூரண அங்கீகாரத்துடன் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பேராசிரியர் பெரேரா தெரிவித்தார்.
அடுத்து வரும் வாரங்களில் கல்வி மற்றும் சுகாதார துறைகளுடன் தொடர்புடைய மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மாவட்டங்களிலுள்ள அதிகாரிகளிடத்தில் அந்தந்த மாகாணங்களில் மற்றும் மாவட்டங்களில் மீள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்து கேட்டறியப்படும்.
அந்த தகவல்களை கவனத்திற் கொண்டு சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் மற்றும் கல்வி அமைச்சின் சிபார்சின் அடிப்படையில் பயணக்கட்டுப்பாடு அகற்றப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளமை குறித்தும் கல்வி அமைச்சின் செயலாளர் குறித்த ஊடக கலந்துரையாடலில் கருத்து தெரிவித்தார்.
அழகியற் கலைகள் பாடத்தினை தவிர ஏனைய அனைத்து பாடங்களுக்குமான பெறுபேறுகள் நேற்று (23) வெளியிடப்பட்டது.
கொவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட உடன் பிரயோக பரீட்சை நடாத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
அழகியற் கலைகள் பாட விதானத்தின் கீழ் நடனம், சங்கீதம் மற்றும் நாடகம் மற்றும் மேடைநாடகம் ஆகிய பாடங்களை கற்று பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரத்தில் கற்பதற்கு அவசியமான ஆகக் குறைந்த தகுதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
2020ம் ஆண்டில் அழகியற் கலைகள் பாடத்தில் 170,000 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர்.
அவர்களில் 05 பாடங்களுடன் 02 சிறப்பு சித்திகளுடன் மற்றும் பாடசாலை அடிப்படையிலான மதிப்பீட்டின் கீழ் 1,2 மற்றும் 3 எனும் (விசேட, சாதாரண, அருகில்) மதிப்பீட்டினை பெற்றுக் கொண்டுள்ள மாணவர்கள் பிரயோக பரீட்சை நடைபெறும் வரை உயர் தரத்தில் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
2020ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் அழகியற் கலைகள் பெறுபேறுகள் தவிர்ந்த ஏனைய பாடவிதானங்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் 75.12 சதவீதத்தினர் க.பொ.த. உயர் தரத்தில் தமது கல்வியினை தொடர்வதற்கான தகுதியினை பெற்றுக்கொண்டுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.
பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளுக்கு தமது பரீட்சை சுட்டெண் மறந்திருப்பின் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பயன்படுத்தி அல்லது 1911 என்ற இலக்கத்துக்கு அழைப்பொன்றை ஏற்படுத்துவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சனத் பூஜித தெரிவித்தார்.
அதிபர்களுக்கு, மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு மெய்நிகர் முறையின் ஊடாக பெறுபேறுகளை அறிந்து கொள்ளும் முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை சான்றிதழ்கள் தேவைப்படும் நபர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மெய்நிகர் முறையினூடாக அதனை பெற்றுக் கொள்வதற்கு முடியுமாக இருக்கும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் (பாடசாலை நடவடிக்கைகள்) எல்.எல்.எம்.டி. தர்மசேன அவர்களும் குறித்த ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
மூலம் - அததெரண