அமைச்சரவையின் தீர்மானத்தை ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்கள புறக்கணிப்பு
சம்பள முரண்பாடு தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தை புறக்கணிப்பதற்கு, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை மற்றும் அதிபர் சேவை ஆகியவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் அதனை வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
அமைச்சரவை உபகுழு மூலம் ஆசிரியர், அதிபர் வேதன முரண்பாட்டை நீக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட வேதன திருத்தங்களை, 2022 பாதீட்டுத் திட்டத்தின் மூலம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவு செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உபகுழுவின் இதர யோசனைகள் மாகாண சபைகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் இணைந்து கல்வி அமைச்சின் மூலம் ஆறு மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பில், ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று கொழும்பில் கூடி ஆராய்ந்தது.
இதன்போது, அமைச்சரவையின் தீர்மானத்தை புறக்கணிப்பதற்கு, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.