தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளமை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வழங்கப்படும், இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவுக்கு தகுதிபெற்று, இதுவரையில் குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் மேன்முறையீடு செய்யவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
2000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும், இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்த இதுதொடர்பாக தெரிவிக்கையில் இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதிபெற்றவர்களில் சுமார் 50% மானோருக்கு 2000 ரூபா கொடுப்பனவு செலுத்ததப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை செலுத்து நடவடிக்கையின், முன்னேற்றம் குறித்து உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்தவுடன் ZOOM தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடினார்.
இந்த கொடுப்பனவை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் செலுத்தி முடிக்குமாறு இராஜாங்க அமைச்சர் மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
18 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவை செலுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.