சுதந்திர வர்த்தக வலயத்தை ஆக்கிரமிக்கும் டெல்டா- அமைச்சருக்கு அவசர கடிதம்

சுதந்திர வர்த்தக வலயத்தை ஆக்கிரமிக்கும் டெல்டா- அமைச்சருக்கு அவசர கடிதம்

இந்தியாவில் உருவாகிய டெல்டா திரிபு கொவிட் 19 வைரஸ் தற்போது சுதந்திர வர்த்தக வலயத்தை ஆக்கிரமித்துள்ளதாக சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நாள்தோறும் தொற்றுக்குள்ளாகிய குறைந்தது 11 ஊழியர்கள் அடையாளங்காணப்படுகின்றனர். அந்நிய செலாவணியை உறுதி செய்ய ஆடைத்தொழிற்சாலை பாரிய பங்களிப்பு வழங்குவதாக அரசாங்கம் கூறினாலும் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே அரசாங்கம் பார்க்கிறது என்று வியர்வைத் துளிகளின் கூட்டமைப்பின் (Dabindu Collective Union) பொதுச் செயலாளர் சமீல துஷாரி நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்டுள்ளார்.

ஸ்டாண்ட் அப் தொழிலாளர் சங்கம், மனித வளர்ச்சிக்கான புரட்சிகர இருப்பு (RED) அமைப்பு, தபிந்து (வியர்வை துளிகள்) கூட்டு சங்கம், ஷ்ரமாபிமானி கேந்திரயா (தொழிலாளர் கண்ணியம்) மற்றும் ஜவுளி ஆடை மற்றும் ஆடை தொழிலாளர் சங்கம் தொழிலாளர் ஆகிய சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் கையெழுத்துடன் அமைச்சுக்கு இக்கடிதம் அனுப்ப்பட்டுள்ள. சுதந்திர வர்த்தக வலயத்தினுல் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை என்பவற்றை 40 வீதம் அதிகரித்தல் உட்பட 9 பிரதான கோரிக்கைகள் இக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொற்று வேகமாக பரவி வரும் நிலையிலும் பணிக்கு சமூகமளிக்கும் ஊழியர்களுக்கான முகக்கவசங்களை கூட சில தொழிற்சாலைகள் வழங்குவதில்லை. பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொற்று நீக்கல் போன்ற அடிப்படை சுகாதார விதிமுறைகள் கூட பின்பற்றப்படுவதில்லை. பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களுடைய குறைந்த பங்களிப்பு காரணமாக கொவிட் 19 தொற்றுக்குள்ளானவருடன் முதற் தொடர்பு நபர் கூட பணிக்கு அனுமதிக்கப்படுகின்றார்.​ சுதந்திர வர்த்தக வலயத்தைச் சூழவுள்ள வைத்தியசாலைகள் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை பாரபட்சமாக நடத்துகின்றனர் என்றும் அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவற்றை கருத்திற்கொண்டு சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கான விசேட சுகாதார விதிமுறைகளை முன்வைக்குமாறும் தினமும் தொற்று நீக்கல் செய்தல் ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்குவதை உறுதிப்படுத்துமாறும் தொழிற்சங்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், தொழில் அமைச்சுடன் கடந்த ஆண்டு கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திற்கமைய, பணிக்கு சமூகமளிக்க முடியாத ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் அரைவாசி அல்லது ரூபா 14,500 ஆகக்குறைந்த சம்பளம் வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஒரு அவசரகால சூழ்நிலையில் தொழிலை ஆதரிப்பதற்கான தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்பதால் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பள கட்டணத்தை மீண்டும் வழங்க ஆவணம் செய்யுமாறும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கொவிட் 19 கொத்தணி உருவானது. இதன்போது அங்கு பணியாற்றும் 50,000 ஊழியர்களின் நிலை குறித்து பல உரிமைக்குழுக்கள் கவலை வௌியிட்டிருந்தன. சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கை நிலையை கருத்திற்கொண்டு அவர்களுக்கான தங்குமிடம் உட்பட தேவைகள் குறித்து தொழிற்சாலைகள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் அக்கடிதத்த்தில் சுட்டிக்காட்டியுள்ளன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image