ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடு- இன்றைய அமைச்சரவைத் தீர்மானம் பயனளிக்குமா?

ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடு- இன்றைய அமைச்சரவைத் தீர்மானம் பயனளிக்குமா?

ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாடு தொடர்பில் இன்றைய (09) அமைச்சரவை கூட்டத்தில் உரிய தீர்வு எடுக்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கைகள் கடுமையாக முன்னெடுக்கப்படும் என்று ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே போராட்டங்களில் கலந்துகொண்ட சில ஆசிரியர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் போராட்டங்களை முடக்க அரசாங்கம் முன்னெடுக்கும் இத்தகைய செயற்பாடுகள் தமது கவனத்தை திரை திருப்பாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்விடயத்தை கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஆசிரியர் போராட்டம் நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொள்கிறது. எனினும் நாம் ஆரம்பித்த போராட்டம் எந்தவித மாற்றமுமின்றி முன்னெடுத்துச்செல்லப்படுகிறது. இன்றைய தினம் ஆசிரியர் அதிபர் போராட்டத்திற்கு மிக முக்கியமான தினமாகும். சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தொடர்பில் இன்று அமைச்சரவை தீர்மானம் வழங்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சில ஆசிரியர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளினூடாக போராட்டங்களை முடக்கி தொழிற்சங்க இயக்கங்களை நிறுத்த அரசாங்கம் முற்படுகிறது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். இவ்வாறான நிலையில் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தி முன்னெடுத்து செல்வோம். ஆசிரியர்களினால் கொவிட் தொற்று ஏற்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. அரசாங்கம் கூறும் ஆசிரியர்கள் போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. சுகயீனம் காரணமாக அவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நாம் மிகவும் பொறுப்புடன் கூறுகிறோம். பொய்யான விடயங்களை கூறி எம்மை அடக்க முடியாது.

 

எமக்கு சொந்தமான சம்பளத்தில் 60 வீதம் இல்லாமல் தான் நாம் சம்பத்தைப் பெறுகிறோம். அரசதுறையில் பெரும்பாலானவர்களுக்கு போதிய சம்பளம் கிடைப்பதில்லை. அரசதுறையில் சம்பளம் மிகவும் குறைவு. அதிலும் மிக குறைவான சம்பளமே ஆசிரியர்களுக்கு கிடைக்கிறது. கொவிட் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் எம்மை பாடசாலைக்கு வருமாறு அமைச்சின்செயலாளர் அறிவித்துள்ளார். அதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தோம். இறுதியில் அந்த சுற்றுநிருபம் மீளப்பெறப்பட்டது என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, கடந்த மாதம் 12ம்திகதி நாம் இந்த போராட்டத்தை ஆரம்பித்தோம். சுமார் 28 நாட்கள் கடந்துவிட்டன. எமது தொழிற்சங்க போராட்டம் வெற்றியடைந்துள்ளது என்றே கூற ​வேண்டும். நிகழ்நிலை கற்பித்தல், கபொத சாதாரதர செயன்முறை பரீட்சை செயற்பாடுகளில் விலகல், உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றின் ஆவணங்கள் தயாரித்தல் போன்ற செயற்பாடுகளில் விலகியமை என்பன வெற்றியளித்துள்ளன.

நாம் சம்பள உயர்வு கேட்கவில்லை. சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோருகிறோம். இது தவிர கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அது மாத்திரமன்றி அனைத்து மாணவர்களுக்கும் நிகழ்நிலை கற்றலுக்கான வசதிகளை பெற்றுத்தருமாறு கோருவதும் மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று. இந்த கோரிக்கைகளுக்காக போராட ஆரம்பித்த 28 நாட்கள் கடந்துவிட்டன.

அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வெ பக்ஞாசேக்கர தேரர், ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ பண்டார உட்பட பல செயறபாட்டாளர்கள் இதன்போது கருத்து தெரிவித்திருந்ததை குறிப்பிடத்தக்கது.

மூலம் - அருண

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image