மேலதிக நேர கொடுப்பனவு வேண்டும்: சுகாதார சேவை பணியாளர்கள் போராட்டம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசாதகர்கள் ஆகிய தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக்கோரி வைத்தியசாலை வளாகத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நேற்றுக் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் கடமையாற்றும் தமக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு செம்டம்பர், நவம்பர் மற்றும் இவ்வருடம் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மேலதிகநேர கொடுப்பனவை மட்டுப்படுத்தி 60 மணித்தியாலங்கள் மாத்திரம் வழங்கி இருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
60 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக பணியாளர்கள் வேலைசெய்த நேரங்களுக்கான கொடுப்பனவை இதுவரை காலமும் தமக்கு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விடையம் தொடர்பாக பல தடவைகள் எழுத்து மூலமாகவும் தொழிற்சங்க அடிப்படையிலும் பணியாளர்கள் ஒன்றிணைந்து வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த 2 ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஒன்றை பணிப்பாளருக்கு அனுப்பி இருந்தோம். கடந்த 9 ஆம் திகதிக்கு முன்னர் சரியான முடிவை வழங்குமாறும், அவ்வாறு சரியான முடிவு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார சேவைகள் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றுக்காலை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தை தவிர வடக்கில் உள்ள ஏனைய மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற பணியாளர்களுக்கான மேலதிநேர கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டனர்.
எனவே, தமக்கு சரியான தீர்வு கிடைக்காத சந்தர்ப்பத்தில் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசாதகர்கள் தெரிவித்தனர்.