தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்தும் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தளர்வும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதுடன் நாளை (5) முதல் 14 நாட்களின் பின்னர் மீளாய்வுக்குட்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுளளது.
இந்நிலையில் கொவிட் தடுப்புக்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, பொதுப்போக்குவரத்து சேவைகளானது, மேல் மாகாணத்தில், ஆசனக் கொள்ளளவில் 30 சதவீதத்திற்கும், ஏனைய மாகாணங்களில், ஆசனக் கொள்ளளவில் 50 சதவீதத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மற்றும் வாடகை வாகனங்களில், ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும்.
எமது இணைதள ஆய்விற்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்
ஆடைத்தொழிற்சாலைகள் உட்பட ஏனைய தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களைக் கொண்டு இயங்க வேண்டும்.
சேவை அவசியம் கருதி, கடமைக்கு அழைக்கப்படக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவன பிரதானியால் தீர்மானிக்க முடியும்.
அத்துடன், இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும், பணியாளர்களை, வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு ஊக்குவிக்க வேண்டும் எனப் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை. மணமகன் மற்றும் மணமகள் உட்பட 10 பேரின் பங்கேற்புடன், பதிவுத் திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் அல்லாத காரணத்தினால் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள், பூதவுடல் கையளிக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க 15 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் அடகுபிடிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரே தடவையில் மொத்தமாக 10 வாடிக்கையாளர்கள் மாத்திரமே அவற்றில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி சந்தைகள் மற்றும் வாராந்த சந்தைகள், உள்ளுராட்சி நிறுவனங்களினால் அமுலாக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ், இயங்க முடியும்.
பொருளாதார மத்திய நிலையங்களை, மொத்த விற்பனைக்காகத் திறக்க முடியும்.
பதிவுசெய்யப்பட்ட நடமாடும் சேவை வர்த்தகர்கள், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய, பதிவுசெய்யப்பட்ட நடைபாதை வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சில்லறை வர்த்தக நிலையங்கள், கடைகள் என்பனவற்றை, சுகாதார விதிமுறைகளுக்கு அமையத் திறக்க முடியும்.