நேற்று (30) ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டை எட்டியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
அமைச்சருடனான சந்திப்பில் இணக்கப்பாடு
ரயில்வே என்ஜின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்றுக் காலை ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று பிற்பகலில் முடிவுக்குக் கொண்டு வந்ததாக ரயில்வே என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
ரயில்வே பிரவேச சீட்டினை இலத்திரனியல் முறைப்படி விநியோகித்தல் வேலைத்திட்டத்தை சர்வதேச நிறுவனம் ஒன்றுக்கு பெற்றுக்கொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஏலவே குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தியபோதிலும் உரிய தீர்வுகள் எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்பட்டது.
ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மக்கள் எதிர்கொள்ள நேரும் அசௌகரியங்களை சமாளிக்கும் வகையில் மேலதிக பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.