இலங்கை ஊடகத்துறையில் பணியாற்றும் சில பெண் ஊடகவியலாளர்கள் #MeToo பாணியிலான சமூக ஊடக பிரச்சாரத்தினூாக பாலியல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ள விடயங்கள் வௌியிட்டுள்ளமை ஊடகத்துறையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியதாகியுள்ளது.
டிவிட்டர் ஊடாக தமக்கு நிகழ்ந்த மோசமான அனுபவங்களை பகிரத்தொடங்கியுள்ள பெண் ஊடகவியலாளர்கள் தம்மை இடைநிலை, சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் தம்முடன் தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பெண் ஊடகவியலாளர்களினால் வௌியிடப்பட்ட சில பாலியல் ரீதியான அடக்குமுறைசார் குற்றச்சாட்டுக்களை அவர்களுடன் அருகில் இருந்து பணியாற்றிய ஏனைய ஊழியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
2010- 2017 காலப்பகுதியில் பத்திரிகையில் ஊடகவியலாளராக பணியாற்றிய சாரா கெல்லபாத்த, தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்போவதாக மிரட்டிய சக ஆண் ஊடகவியலாளர் மிரட்டியதாக டிவீட் செய்ததையடுத்து விடயம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தற்போது செயற்படாத பத்திரிகையொன்றின் பிரபல ஆசிரியர் தன்னை பாலில் துஷ்பிரயோகம் செய்தார் என்று சஹ்லா இல்ஹாம் என்ற ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அமைதியாக இருக்குமாறு தனது குடும்பம் அழுத்தம் கொடுத்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய இத்ததைய பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்று ஊடக அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல்ல அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் இலங்கைக்கான சர்வதேச செய்தியாளர்கள் அமைப்பு கண்டனத்தை வௌியிட்டுள்ளதுடன், பணியிடத்தில் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளான ஊகவியலாளர்களுடன் கைகோர்ப்பதாகவும் அவ்வமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் தடுப்பதற்கான செயற்பாடுகளை இணைந்து முன்னெடுக்குமாறும் ஊடகநிறுவனங்களிடம் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் எம்முடன் பணியாற்றும் அனைவரும் பாதுகாப்பான பணிச்சூழலை அனுபவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது எம்மனைவரினதும் பொறுப்பு என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.