பொதுச் சொத்துக்கள் விற்பனைக்கு எதிராக அணிதிரளுமாறு கோரிக்கை

பொதுச் சொத்துக்கள் விற்பனைக்கு எதிராக அணிதிரளுமாறு கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று நோய் பரவல்  நிலையைப் பயன்படுத்தி அரசாங்கத்தினால்  ஜனநாயக விரோதமான முறையில்  நாட்டின் மிகப் பெறுமதியான சொத்துக்களை  விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து தலையீடு செய்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அனைத்து பௌத்த தேரர்கள் உட்பட  பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கு கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
தற்போது வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள அரச சொத்துக்களை மீண்டும் அரசுக்கு கையகப்படுத்துவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம்,  அண்மையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றின்மூலம், கொழும்பு கோட்டையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க, மிகப் பெறுமதி வாய்ந்ததும்,  தொல்பொருள் ரீதியாக மதிப்பிட முடியாததுமான வெளிவிவகார அமைச்சின் கட்டிடம், கபூர் கட்டிடம், இலங்கை வங்கிக்குச் சொந்தமான யோர்க் வீதியிலுள்ள கட்டிடம் பிரதான தபால் காரியாலயம் உள்ளிட்டு பல கட்டிடங்களை அரசாங்க  உரித்திலிருந்து விடுவித்து  தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
 
கொழும்பு கோட்டையில் உள்ள பொருளாதார மையத்தினதும் தொல்பொருள் மற்றும் கலாசார ரீதியாக மிகப்பெறுமதி வாய்ந்த கட்டிடங்களை இவ்வாறாக தனியார் துறையினருக்கு வழங்கும் தீர்மானத்தை நிறுத்துமாறு அரசியல் பிரதிநிதிகளிடம் சங்கம் கோரியுள்ளது. 
 
அதேபோன்று இந்த செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எமது சங்கம் உள்ளிட்ட  பல்வேறு சுயாதீன தொழிற்சங்கங்கள் இணைந்து நிறுவப்பட்டுள்ள பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தீர்மானித்துள்ளது.
 
இந்தக் கட்டிடங்களில் 1955 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இலங்கை வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட யோர்க் வீதியில் உள்ள கட்டிடம் 30 ஆண்டுகளுக்கும் அதிக காலம் இலங்கை வங்கியின் பிரதான காரியாலயம் ஆக பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் பரவல்  நிலையைப் பயன்படுத்தி அரசாங்கம்  ஜனநாயக விரோதமான முறையில்  நாட்டின் மிகப் பெறுமதியான சொத்துக்களை  விற்பனை செய்வதை எதிர்த்து தலையீடு செய்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
 
அதற்காக உங்களுடைய ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
 
நடமாட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர்  சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதுடன், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு அதற்கு முன்னதாக தொலைபேசி ஊடாக அல்லது ஏனைய தொழிநுட்ப முறைமை பயன்படுத்தி கலந்துரையாட எதிர்பார்ப்பதாக இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image